Close
அக்டோபர் 12, 2026 9:35 மணி

நாமக்கல்லில் ஆபாச செல்போன் ஆப் மூலம் ஆண்களிடம் வழிப்பறி: 4 பேர் கைது

நாமக்கல்லில் ஆபாச செல்போன் செயலி மூலம் ஆண்களை ஏமாற்றி, பணம் வழிப்பறி செய்த, 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு ஆபாச செல்போன் செயலி மூலம், நாமக்கல் பெரியப்பட்டியை சேர்ந்த நவாஸ் (19) என்பவர் நண்பர் ஆனார். அப்போது நவாஸ் அவரை நாமக்கல்லுக்கு வருமாறும், வந்தால் ஒரின சேர்க்கைக்கு அழைத்து செல்வதாக கூறினார்.

அதை நம்பி அந்த நபர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நாமக்கல் வந்தார். அப்போது நவாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அந்த வாலிபரை தாக்கி அவர் செல்போனில் இருந்து கூகுள்பே மூலமாக ரூ.7 ஆயிரத்தை பறித்துக் கொண்டனர். இது குறித்து அந்த வாலிபர் நாமக்கல் போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் நாமக்கல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மேலும் ஒரு வாலிபரையும், அதே ஆபாச செல்போன் செயலி மூலம் நவாஸ் தரப்பினர் தொடர்பு கொண்டு ஒரின சேர்க்கைக்கு கடந்த 9-ம் தேதி அழைத்துள்ளனர். நாமக்கல் வந்த அந்த வாலிபரையும் நவாஸ் கோஷ்டி தாக்கி ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் பறித்தனர்.

இது குறித்து அந்த நபரும் நாமக்கல் காவல்துறையில் புகார் செய்தார். புகார்கள் மீது நாமக்கல் நகர காவல் ஆய்வாளர் நாகராஜ் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அதில் நாமக்கல் பெரியப்பட்டியை சேர்ந்த ஜீவபாரதி (20), சேந்தமங்கலம் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்த விஜய் (20), பெரியப்பட்டி எம்.ஜி.ஆர். நகர் நவாஸ் (19), பெரியப்பட்டியை சேர்ந்த 18 வயது சிறுவன் என மொத்தம் 4 பேர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில்  ஆஜர் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது: செல்போனில் வரும் ஆபாச செயலிகள் மூலமாக வாலிபர்களிடம் தொடர்பு கொண்டு, அவர்களை வரவழைத்து அவர்களை தாக்கி வழிப்பறி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. தேவையற்ற அப்ளிகேஷன்களை யாரும் டவுன்லோடு செய்யக் கூடாது என கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top