வீட்டு மின் நுகர்வோர் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்து உபயோகிப்பதை ஊககுவிக்கும் விதமாக மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
இது தொடர்பாக நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட 5 கோட்டங்களில் வீட்டு மின் நுகர்வோர் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்து உபயோகப்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக அரசும் மின் வாரியமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஏற்கனவே வழங்கப்படும் மானியத்துடன் சேர்த்து கூடுதலாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மானியமும் வழங்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டங்களில் சேவா சேது அபியான் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் வீட்டு மின் நுகர்வோர் இந்த திட்டத்தில் இணைந்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதன்படி நாளை புதன்கிழமை பரமத்திவேலூர் ராஜா மண்டபத்திலும், வியாழக்கிழமை நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள துணை மின் வளாகம், ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், வெள்ளிக்கிழமை பள்ளிபாளையம் சமுதாய கூடம், திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
இந்த முகாமில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதில் பொதுமக்களுக்கு சூரிய ஒளி மின்சார திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சூரிய ஒளி மின் தகடுகள் நிறுவுவதற்கான வழிமுறைகள், அரசு மானியம் பெறுவதவதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படுமம்.
இந்த முகாமில் சூரிய மின் தகடு அமைப்பாளர்கள் மற்றும் வங்கி கடன் சம்பந்தமான ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ன. மேலும் முகாமில் பங்கேற்கும் மின் நுகர்வோர்களுக்கு விண்ணப்பம் ஆன்லைன் மூலம் www.pmsuryaghar.gov.in பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ஒரு கிலோ வாட் சோலார் தகடு திறனுக்கு மாநில அரசு மானியம் ரூ.5 ஆயிரம், மத்திய அரசு மானியம் ரூ.30 ஆயிரம், மொத்த மானிய தொகை ரூ.35 ஆயிரம் ஆகும். பயனாளி தோரயமாக ரூ.70 ஆயிரம் செலுத்த வேண்டும்.
2 கிலோ வாட்டிற்கு மாநில அரசு மானியம் ரூ.10 ஆயிரம், மத்திய அரசு மானியம் ரூ.60 ஆயிரம், மொத்த மானியமாக ரூ.70 ஆயிரம். இதற்கு பயனாளி தோராயமாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் செலுத்த வேண்டும்.
3 கிலோ வாட் சோலார் தகடு திறனுக்கு மாநில அரசு மானியம் ரூ.22 ஆயிரம், மத்திய அரசு மானியம் ரூ.78 ஆயிரம், மொத்த மானிய தொகை ரூ.1 லட்சம் ஆகும. இதற்கு பயனாளி தோராயமாக ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் செலுத்த வேண்டும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.




