நாமக்கல் மாநகராட்சியில் உள்ள காலி மனைகளை அதன் உரிமையாளர்கள் சுத்தமாக பராமரிக்காவிட்டால் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் காலியாக உள்ள மனைகளின் உரிமையாளர்கள், தங்களுக்குச் சொந்தமான நிலங்களைப் புல், புதர் மற்றும் குப்பைகள் இல்லாமல் சுத்தமாகப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்.
காலி மனைகளில் புல், புதர்கள் மற்றும் குப்பைகள் அதிகமாகச் சேர்வதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தங்கும் இடமாக மாறுவதுடன், அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
மேலும், இத்தகைய இடங்களில் தண்ணீர் தேங்குவதன் மூலம் ஏடிஸ் வகைக் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு அனைவரும் காலி மனைகளைத் தொடர்ந்து சுத்தமாகப் பராமரிப்பது அவசியமாகும்.
நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் சுத்தமில்லாத காலி மனைகளைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் மூலம் நோட்டீஸ் வழங்கப்படும். நோட்டீஸ் பெற்ற நாளிலிருந்து 7 நாட்களுக்குள் உரிமையாளர்கள் தங்களது காலி மனைகளைச் சுத்தம் செய்து, சுத்தம் செய்யப்பட்டதற்கான புகைப்படங்களை மாநகராட்சி அலுவலகத்திள் சமர்ப்பிக்க வைக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிலத்தைச் சுத்தம் செய்யத் தவறும் உரிமையாளர்கள் மீது நடைமுறையில் உள்ள விதிகளின்படி ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




