தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திருமணம் முடிந்து தனிக் குடித்தனம் சென்ற பொதுமக்கள், அரசு நிர்ணயித்த அனைத்து ஆவணங்களுடன் புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பித்து ஓராண்டுக்கு மேலாகியும் அதிகாரிகள் தொடர்ந்து மனுக்களை நிராகரித்து வருகின்றனர்.
விண்ணப்பதாரர்களின் பெயரில் எரிவாயு இணைப்பு இல்லை எனக் கூறி உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மனுக்களைத் தள்ளுபடி செய்வதும், மறுபுறம் ரேஷன் அட்டை இருந்தால்தான் சிலிண்டர் இணைப்பு தரப்படும் என ஏஜென்சிகள் திருப்பி அனுப்புவதுமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு, 10-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முகம்மது ராசப்பா தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்தனர்.
அதிகாரிகளின் முரண்பாடான வாய்மொழி உத்தரவுகளால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்பை உணர்த்தும் வகையில், கவனத்தை ஈர்க்கும் விதமாகக் கைகளில் காலி கேஸ் சிலிண்டரைத் தூக்கி வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அரசு ஆவணம் ஏதுமற்ற அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவை ரத்து செய்து, எவ்வித தடையுமின்றி புதிய குடும்ப அட்டைகள் வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட இந்தச் சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




