வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம் அமைக்க அரசு மானியத்தில் இடு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் காய்கறி விலை, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டை கருத்தில் கொண்டு பொது மக்கள் குறைந்த இடம் மற்றும் குறைந்த செலவு கொண்டு வீட்டுத்தோட்டம் அமைக்க வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
வீட்டுத் தோட்டம் அமைப்பதால் நஞ்சில்லா காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கும். இந்த திட்டத்தில் மாடித் தோட்டங்கள், மாடியில் நிழல்வலைக் குடில் அமைத்து காய்கறி தோட்டம், காய்கறி விதை தொகுப்பு மற்றும் பழச்செடி தொகுப்புகள் இடம் பெறுகின்றன.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாடித்தோட்டத் தொகுப்புகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. மாடித்தோட்டத் தொகுப்பில் செடி வளர்ப்புப் பைகள், தென்னை நார்க்கழிவுக் கட்டிகள், 6 வகையான காய்கறி விதைகள், உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சாணக் கொல்லி, வேப்பெண்ணெய் மருந்து, மண்புழு உரம் மற்றும் மாடித்தோட்டம் அமைத்து பராமரிப்பதற்கான கையேடு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த மாடித் தோட்டத் தொகுப்பின் மதிப்பு ரூ.1,450 ஆகும். இதில் 50 சதவீத மானியத்தில் ரூ.725க்கு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு நபர் 2 தொகுப்பு வரை பெற்று பயன்பெறலாம். மாவட்டத்தில் 2026- 27-ம் ஆண்டிற்கு 1,500 மாடித் தோட்டத் தொகுப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாடிதோட்டத்தில் நிழல்வலைக் குடில் அமைப்பதற்கு நாமக்கல் மாவட்டத்திற்கு 100 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 100 சதுர அடியில் 50 சதவீத நிழல் தரக் கூடிய நிழல்வலை அமைப்பதற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியத்தில் ரூ. 3,500க்கு வழங்கப்பட உள்ளது.
காய்கறி விதைத்தொகுப்பு 75 சதவீத மானியத்தில் 6 வகையான விதைகள்- தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கீரை மற்றும் கொத்தவரை ரூ.15-க்கு வழங்கப்பட உள்ளது. பழச்செடி தொகுப்புகள் (கொய்யா, பலா, பப்பாளி, சீத்தா மற்றும் எலுமிச்சை) 75 சதவீத மானியத்தில் ரூ. 25க்கு வழங்கப்பட உள்ளது. இந்த 2 தொகுப்புகளும் தலா 20 ஆயிரம் நாமக்கல் மாவட்டத்திற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் அமைக்க விரும்பும் பொது மக்கள் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையின் tnhorticulture.tn.gov.in/kit வெப்சைட் மூலம், தாங்கள் வசிக்கும் முகவரியின் ஏதாவது ஒரு அடையாள அட்டை மற்றும் புகைப்படம் வைத்து விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.




