நாமக்கல்லில் காவல்துறையினரை கண்டித்து வக்கீல்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினராகவும், வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளராகவும், நாமக்கல்லை சேர்ந்த வக்கீல் அய்யாவு பணியாற்றி வருகிறார். அவரைப்பற்றி ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் அவதூறான முறையில் மீடியாவில் பேட்டியளித்தது தொடர்பாக, அவர் மீது, நல்லிபாளையம் காவல்நிலையத்தில் கடந்த 18ம் தேதி வக்கீல் அய்யாவு புகார் அளித்தார்.
அந்த புகாரின் மீது காவல்துறையினர் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினரை கண்டித்து கடந்த ஒரு வாரமாக நாமக்கல் மாவட்டம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் பொது செயலாளரை அவதூறாக பேசிய ரியல் எஸ்டேட் அதிபரை கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.
கூட்டமைப்பின் சார்பில் நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில தலைவர் கரூர் மாரப்பன் தலைமை வகித்தார். நாமக்கல் வக்கீல்கள் சங்க தலைவர் பாலசுப்பரமணியன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அனைவரும் பேரணியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வக்கீல்களை அலுவலகத்திற்குள் நுழையவிடாமல் தடுத்ததால், வக்கீல்கள் எஸ்.பி. அலுவலகத்திற்கு முன்பு நாமக்கல்-திருச்செங்கோடு மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வக்கீல்கள் சங்க நிர்வாகிகளை காவல்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்குள் அழைத்துச்சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் பொது செயலாளர் வக்கீல் அய்யாவு கொடுத்த புகாரின்பேரில், சம்மந்தப்பட்டவர் மீது நல்லிபாளையம் போலீசில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் உறுதியளித்தனர்.
இதைத்தொடர்ந்து வக்கீல்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை 26ம் தேதி முதல் நாமக்கல் உட்பட தமிழகம் முழுவதும் வக்கீல்கள் வழக்கம்போல் நீதிமன்றத்திற்கு செல்வார்கள் என கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் தெரிவித்தார்.




