நாமக்கல் மாவட்டத்தில் 5 கூட்டுறவு அங்காடிகளில் ரூ. 100க்கு 10 வகையான வெற்றி காய்கறி தொகுப்பு வழங்கப்படுகிறது. இது குறித்து, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குறைந்த விலையில், வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு மாவட்டத்தில் உள்ள 5 கூட்டுறவு அங்காடிகளில் வழங்கப்படுகிறது. இன்று 5ம் தேதி, நாளை 6ம் தேதி, மற்றும் 7ம் தேதி வரை மலிவு விலை காய்கறிகள் விற்பனை நடைபெறும்.
காய்கறி தொகுப்பில் பெரியவெங்காயம் 500 கிராம், தக்காளி 500 கிராம், கத்தரிக்காய் 250 கிராம், உருளைக்கிழங்கு 250 கிராம், கேரட் 200 கிராம், பீன்ஸ் 200 கிராம், பச்சை மிளகாய் 100 கிராம், எலுமிச்சை 100 கிராம், இஞ்சி 50 கிராம், தேங்காய் 400 முதல் 450 கிராம் என மொத்தம் 2,550 முதல் 2,600 கிராம் வரையில் 10 காய்கறிகள் இடம்பெறும்.
விருப்பமுள்ள பொதுமக்கள், , நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை, திருச்செங்கோடு டிசிஎம்எஸ் கூட்டுறவு சங்கம், பள்ளிபாளையம் உழவர்பணி கூட்டுறவு சங்கம், ராசிபுரம் ஆர்சிஎம்எஸ் கூட்டுறவு சங்கம், மோகனூர் சர்க்கரை ஆலை பணியாளர்கள் பண்டகசாலை ஆகிய இடங்களில் காய்கறி தொகுப்பினை பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




