Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

கூடுதல் விலையில் உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து: கலெக்டர் எச்சரிக்கை

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலையில், உரம் விற்பனை செய்தால், விற்பனையாளரின் உரிமம் ரத்து செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 254 தனியார் உர விற்பனை மையங்கள் மற்றும் 171 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வகை உரங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது மாவட்டத்தில் எதிர் வரும் கோடை பயிர் சாகுபடிக்கு யூரியா உர வகை 2,118 டன், டிஏபி உர வகை 1,406 டன், பொட்டாஷ் 950 டன், சூப்பர் பாஸ்பேட் 263 டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உர வகை 3,679 டன் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான அனைத்து வகை உரங்களையும் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பெற்று பயன் பெறலாம். உர விற்பனையாளர்கள், கொள்முதல் செய்யக்கூடிய அனைத்து வகை உரங்களையும், குறிப்பாக யூரியா உரங்களை விவசாயிகளின் தேவைக்கு தகுந்தாற்போல் அவர்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து விநியோகம் செய்ய வேண்டும்.

உர விற்பனை மேற்கொள்ளும்போது பட்டியலிட்டு விவசாயிகளுக்கு விற்பனை ரசீது கொடுக்க வேண்டும். அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதலாக விற்பனை செய்தல், உரிமம் இல்லாத இடத்தில் இருப்பு வைத்து விற்பனை செய்தல், யூரியா கடத்தல், பதுக்கல் மற்றும் முறையற்ற தன்மையில் ஈடுபட்டால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top