Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

சர்க்கார் வாழவந்தி ஏரி புனரமைப்பு பணி: கலெக்டர் துவக்கி வைப்பு

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, எஸ்.வாழவந்தி கிராமத்தில், சர்க்கார் வாழவந்தி ஏரி பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில், ஏரியை புனரமைக்கும் பணி துவங்கியது. ப.வேலூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சேகர் முன்னிலை வகித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து, ஏரி புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்து பேசியதாவது: எஸ்.வாழவந்தியில் அமைந்துள்ள, 185 ஏக்கர் பரப்பளவு கொண்ட சர்க்கார் வாழவந்தி ஏரியை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த, 15 ஆண்டுகளாக, இந்த ஏரிக்கு தண்ணீர் வராத நிலையில், மீண்டும் நீர் வரத்து பெறும் முயற்சியாக இப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏரியில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதை முதல் கட்டப் பணியாக மேற்கொள்ளப்படுகிறது. ‘ட்ரோன்’ மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளில், ஏரியில் அதிகளவில் சீமைக்கருவேல மரம் இருப்பது கண்டறியப்பட்டது. இவை, நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சுவதால், அவற்றை முதலில் அகற்றி, தொடர்ந்து ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி, நீர் வரும் மற்றும் வெளியேறும் வழித்தடங்களை புனரமைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்காக முறையான டெண்டர் விடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஏரியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதன் மூலம் மட்டும் அரசுக்கு, ரூ.ரூ27 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

அகற்றப்படும் சீமைக்கருவேல மரங்கள், இயந்திரங்கள் மூலம் சிறிய துகள்களாக அரைக்கப்பட்டு, தொழிற்சாலைகளில் ‘பிரிக்கெட்ஸ்’ எனப்படும் பயனுள்ள எரிபொருளாக மாற்றப்படுகின்றன. தொடர்ந்து மற்ற ஏரிகளிலும் இத்தகைய புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நீர்வளத்துறை இன்ஜினியர் விஜயகுமார், என்.டி.சி., குரூப் நிறுவனர் சந்திரமோகன், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பு தலைவர் செந்தூர்பாரி, நீர்வள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் ஆலோசகர் பழனிதுரை, மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top