சிவகங்கை மாவட்டம், செட்டிநாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவிகள், கிராமப்புற விவசாயிகளை நேரில் சந்தித்து நெல்லோடு வசம்பு கிழங்கை ஊடுபயிராக போடுவதன் மூலமாக கிடைக்கும் நன்மைகள், வருமானம் குறித்து எடுத்துரைத்தனர்.
வேளாண் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான ஒரு முக்கியப் பயிற்சித் திட்டமாகும். இந்த கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டம் திட்டத்தின் மூலம் மாணவர்கள் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுடன் தங்கி நேரடி களப்பயிற்சி பெறுகின்றனர்.
அதன்படி, செட்டிநாடு வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள், ஹேமப்பிரியா, இஷானிகாஸ்ரீ, ஜனோபர் பாத்திமா, லாவண்யா, மணிபாரதி, ஜீன்ரிபி ஆகியோர், சிவகங்கை அருகே கல்லல் கிராமத்துக்கு நேரில் சென்று அங்குள்ள விவசாயிகளுக்கு நெல்லுடன் ஊடுபயிராக வசம்பு கிழங்கை பயிரிடுவதன் மூலமாக கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கமளித்தனர்.
வசம்பு என்பது மூலிகை மற்றும் நறுமணப் பயிர் வகையைச் சேர்ந்த ஒரு நீர்வாழ், சதுப்புநிலப் பூண்டுத் தாவரமாகும். வேளாண் ரீதியாக இது ஒரு கிழங்கு வகைப் பணப்பயிராகவும் கருதலாம். வசம்பில் ஆல்பா-அஸரோன் மற்றும் பீட்டா-அஸரோன் போன்ற வீரியமிக்க உயிர் வேதியியல் கூறுகள் உள்ளன,
இவை வலுவான பூச்சிக்கொல்லி மற்றும் பூச்சி விரட்டும் பண்புகளைக் கொண்டவை. நெல் வயலில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வசம்பு வளரும்போது, அதன் வேர் சுரப்பிகளும் மற்றும் இலைகளின் நறுமணமும் வேர்ப் பேன்கள், தண்டு துளைப்பான்கள் மற்றும் இலை சுருட்டுப் புழுக்களை அழிக்கின்றன.
வசம்பு மெதுவாக வளரக்கூடிய ஒரு கிழங்கு வகைப் பயிராக இருப்பதால், நெல் அறுவடைக்குப் பிறகு மண்ணில் எஞ்சியிருக்கும் உரங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. இது ஊட்டச்சத்துக்கள் வீணாகக் கரைந்து வெளியேறுவதைத் தடுப்பதுடன், ஒட்டுமொத்த உரப் பயன்பாட்டுத் திறனையும் மேம்படுத்துகிறது.
நெற்பயிர்களுக்கு இடையே உள்ள அகலமான வரிசைகளில் வசம்பு ஒரு வாழும் மூடாக்காகச் செயல்பட்டு, நீர்வாழ் களையை வளரவிடாமல் தடுக்கிறது. இது கைக் களை எடுப்பதற்கான மனித உழைப்பின் தேவையைக் குறைக்கிறது. நெல் வண்டுகள் வராமல் தடுக்க உதவுகிறது.
வசம்புக் கிழங்குகள், 10 முதல் 12 -ஆவது மாதங்களில் அதிக வருவாயை ஈட்டித் தருகின்றன. இது நெல் விதையின் முளைப்புத் திறனைப் பாதிக்காமல், 9 முதல் 12 மாதங்கள் வரை பாதுகாப்பை வழங்குகிறது என மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.




