திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள பல்வேறு ஆசிரமங்கள், அறக்கட்டளைகள் சார்பில் பக்தர்களுக்குச் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவான மகா தீப திருவிழா நேற்று காலை பரணி தீபம் விழா மற்றும் நேற்று மாலை , அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வை காண சுமார் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு திருவண்ணாமலை கிரிவலப் பாதை முழுவதும் சிறப்பு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.
அன்னதானம் வழங்குபவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கி இருந்தனர். மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிய இடங்களில் அன்னதானங்கள் நடைபெற்றது.
கிரிவலப் பாதையில் செங்கம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் தினசரி சாதுக்கள் மற்றும் பக்தர்களுக்கு உணவளிக்கப்படுவதோடு, மாத யில் பௌர்ணமி, சித்ரா பௌர்ணமி ,கார்த்திகை தீபத் திருவிழா உள்ளிட்ட நாட்களில் வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது.
கிரிவலப் பாதையில் உள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் இருந்தே தொடர் அன்னதான நிகழ்வு நடைபெற்றது. .
இந்நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற நீதி அரசர் சொக்கலிங்கம், மற்றும் ஓய்வு பெற்ற நீதி அரசர் ஞானப்பிரகாசம், மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர். சுமார் 25 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் மட்டும் வழங்காமல் லட்டு போன்ற இனிப்பு வகைகளும் நேற்று இரவு சூடான பாதாம் பால் மற்றும் ஆப்பிள் , மாதுளை, வாழைப்பழம் என பழங்களும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கினார்கள்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கிரிவலப் பாதையில் உள்ள அருளாளர் அருணகிரிநாதர் திருக்கோயில் அருணாசலேஸ்வரர் திருமண மண்டபத்தில் துறையூர் ஓங்கார குடில் அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு ஓங்கார குடில் சுவாமி சாந்தானந்தபுரி தலைமை தாங்கினார். இந்த அமைப்பின் சார்பில் மகாதீபத்தையட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவை சுபாஷ், மகாலட்சுமி ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கிவைத்தனர். அதனைத் தொடர்ந்து சாதுக்களுக்கு வஸ்திரதானமும் பக்தர்களுக்கு சுவாமி பிரசாதமும் வழங்கப்பட்டன.





