நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட காவேட்டிப்பட்டி பூங்காவில், சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் கீழ், வண்ணத்துப்பூச்சி வாழ்விடப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு எம்எல்ஏ திலீப், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து பூங்காவினை திறந்து வைத்துப் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: காவேட்டிப்பட்டி பூங்காவில், சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் கீழ் வண்ணத்துப்பூச்சி வாழ்விடப் பூங்கா (பட்டர்ஃபிளை ஹேபிடேட் பார்க்) அமைக்கப்பட்டுள்ளது.
வண்ணத்துப்பூச்சிகளின் சூழலியல் முக்கியத்துவம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பின் அவசியம் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
வளர்ந்த வண்ணத்துப்பூச்சிகளுக்குத் தேவையான உணவை வழங்கும் பல்வேறு வகையான தேன் மற்றும் பூக்கள் நிறைந்த தாவரங்களைக் கொண்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு வண்ணத்துப்பூச்சி இனங்களின் இனப்பெருக்கம் மற்றும் வாழ்க்கைச் சுழற்சிக்குத் துணைபுரியும் வகையிலான தாவரங்களும் (நெக்டார் பிளாண்ட்ஸ்) இங்கு வளர்க்கப்படுகின்றன.
இப்பூங்கா மாவட்டத்திற்கான ஒரு முக்கியமான கல்வி மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு முயற்சியாகத் திகழ்கிறது என தெரிவித்தார்.




