கல்லூரி மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவது எப்படி என்பது குறித்து நாமக்கல்லில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி கணிதத் துறை சார்பில், சிஎஸ்ஐஆர் நெட், டிஎன் செட் மற்றும் டிஆர்பி போட்டித் தேர்வுகளுக்கான, மாநில அளவிலான 2 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கல்லூரி கணிதத் துறைத் தலைவர் கணேசன் வரவேற்றார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கணிதப் பாடத்தை எளிமையாகக் கற்று போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும், சவுந்திரராஜன் கணிதப் போட்டித் தேர்வுகளுக்கான பல்வேறு உத்திகள் மற்றும் பாடம் சார்ந்த பயிற்சி முறைகள் குறித்து பயிற்சி அளித்தார்.
2ம் நாள் பயிற்சியில் பேராசிரியர் சிவகுமார் வரவேற்றார். மதுரை தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் பேராசிரியர் ஞானப்பிரகாசம் கலந்துகொண்டு பேசினார். முகாமில் 23 கல்லூரிகளைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
2 நாட்கள் நடத்தப்பட்ட பாடங்களின் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதலிடமும், சேலம் ஸ்ரீ சாரதா கல்லூரி 2ம் இடமும், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி 3ம் இடமும் பெற்றன.
ரகுபதி, சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பேசினார்கள். முகாமை கணிதத் துறைப் பேராசிரியர்கள் வடிவேல், விஜயலட்சுமி,சாந்தி, சித்ரா, தமிழரசி ஆகியோர் இணைந்து நடத்தினர்.




