Close
அக்டோபர் 3, 2026 9:40 மணி

தலைமலையில் முதன்முறையாக பக்தர்களுக்காக டோலி சேவை தொடக்கம்

தலைமலையில், பக்தர்களுக்காக அவசர டோலி சேவையை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், வடவத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமலையில், செங்குத்தான மலை உச்சியில் 2,700 அடி உயரத்தில் அமைந்துள்ள, சஞ்சீவிராய பெருமாளைத் தரிசிக்க ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

பக்தர்கள் நீண்ட தூரம் காட்டுப் பாதை வழியாக நடந்து சென்று தலைமலையின் உச்சிக்குச் செல்ல வேண்டும். குறிப்பாக, மலை உச்சியில் தரிசனத்திற்குச் செல்லும் பொதுமக்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டால் முதலுதவி அளிப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களை மலை உச்சியிலிருந்து அடிவாரத்திற்குப் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கும் உரிய வசதிகள் இதுவரை இல்லை.

அதன் ஒரு முக்கிய முயற்சியாக, மலைக்கு வருகை தரும் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அவசர நேரங்களில் உதவியாக இருக்கும் வகையில் ஆட்கள் மூலம் தூக்கிச்செல்லும் டோலி வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா மேற்பார்வையில் தலைமலை சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் அக்னி ராஜேஷ் மூலம் மூலம் தன்னார்வலர்களின் உதவியுடன் இலவச டோலி சேவை ஏற்படுத்தப்பட்டது.

இரண்டு டோலிகளுக்கான நிதி உதவியை நாமக்கல் தனியார் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. அதற்கான தன்னார்வலர்கள் சேவா டிரஸ்ட் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையொட்டி, இலவச டோலி வசதி தொடக்க விழா நடைபெற்றது. நாமக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா கலந்துகொண்டு இலவச டோலி சேவையை தொடங்கி வைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top