Close
அக்டோபர் 3, 2026 10:07 மணி

புரட்டாசி 3ம் சனிக்கிழமை: நாமக்கல் பகுதி பெருமாள் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி மாதம் 3ம் சனிக்கிழமையையொட்டி , மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் நகரின் மையத்தில் ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் மீது, மலை வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையையொட்டி,  அதிகாலை சுவாமிக்கு பால், தயிர், நல்லெண்ணெய், பன்னீர், சீயக்காய், திருமஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மோகனூர் காவிரியின் வடகரையில் கல்யாண பிரசன்ன வெங்கட ரமண பெருமாள் கோயில் உள்ளது. இங்கு, சுவாமி பத்மாவதி தாயார் சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இக்கோயிலில், ஆண்டு தோறும், புரட்டாசி சனிவார பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, 3ம் சனிக்கிழமையான இன்று, காலை 9:00 மணிக்கு, விசேஷ அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, சுவாமி, சந்தனகாப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மோகனூர் தாலுகா, மணப்பள்ளியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஆலயத்தில், மூலவருக்கு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, துளசி மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. வளையப்பட்டியில் உள்ள பத்மாவதி மஹாலக்ஷ்மி தாயார் சமேத பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோயிலில், மூலவர் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாளுக்கும், பத்மாவதி மகாலட்சுமி தாயருக்கும் பல்வேறு நறுமண பொருட்கள் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top