Close
அக்டோபர் 5, 2026 8:31 மணி

வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பூத நாராயண பெருமாள்

வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பூத நாராயண பெருமாள்

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் மாட வீதியில் உள்ள ஶ்ரீபூத நாராயண பெருமாளுக்கு புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை  முன்னிட்டு மகா சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன.

புரட்டாசி மாதம் எப்போதும் பெருமாளுக்கு உரிய நாளாக இருந்து வருகிறது. புரட்டாசி மாதங்களில் இந்துக்கள் வைணவ கோயில்களுக்கு படையெடுப்பது வழக்கமாக உள்ளது. ஒருவரின் வாழ்வில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும் புதன் பகவானுக்கே அதிபதியாக, அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. அந்த புதன் பகவானின் அதிதேவதையான மகாவிஷ்ணுவை, புதன் அவதரித்த புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை வழிபட்டால் வாழ்வில் உள்ள சங்கடங்களும், கஷ்டங்களும் நீங்கும் என்பது ஐதிகமாக உள்ளது‌.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாட வீதியில் பெரிய தெருவில் குபேர மூலையில் வீற்றிருக்கும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ.பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஆராதனைகள் நடைபெற்றது .

பகவான் கிருஷ்ணரை அழிக்க கம்சன் பூதகி என்ற அரக்கியை பகவான் கிருஷ்ணர் இடம் அனுப்பி உள்ளார். இந்நிலையில் கிருஷ்ணன் பூதகியை வதம் செய்ததால் இந்த பெருமான் பூத நாராயணன் என்று அழைக்கப்படுகிறார் என்பது ஐதீகம்.  பூத நாராயணர் சன்னதியில் இருக்கும் மூலவர் குபேரன் போல் இருப்பதால் வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை அன்று பூத நாராயணனை வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பதும் ஐதீகம்.

புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு காலை கோவிலின் நடை திறக்கப்பட்டு ஶ்ரீ.பூத நாராயணனுக்கு சந்தனாதி தைலம்,  பச்சரிசி, மாவு, பால், இளநீர், எலுமிச்சைச்சாறு, சொர்ண அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சபரி பட்டாச்சாரியார் வேத மந்திரங்கள், முழங்க பெருமாள் பாசுரங்கள் பாட பகவானுக்கு மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது .

பின்னர் வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் ஸ்ரீபூத நாராயண பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஸ்ரீபூத நாராயணனின் அபிஷேகத்தையும் தீப ஆராதனையையும் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு  காத்திருந்து பக்தியுடன் தரிசித்து சென்றார்கள். உற்சவமூர்த்தி ஶ்ரீவெங்கடேசபெருமாள்  அலங்காரத்தில் காட்சியளித்தார். சிறப்பு அபிஷேக அலங்காரம், பூஜைகளை திருக்கோவில் பட்டாச்சார் சபரிநாதன் செய்திருந்தார்.

திருவண்ணாமலை-தேசூர்

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் நகரில் உள்ள ஆதி கேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமி மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் முத்து கொண்டை அலங்காரம் செய்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேச பெருமாள் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது பக்தர்கள் மாக்கோலமிட்டு கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். பக்தர்கள் பெரிய திருவடி சிறிய திருவடி வேடமணிந்து மேளதாளத்துடன் பக்தி பாடல் பாடி உடன் வந்தனர்

கீழ்பென்னாத்தூரில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்று விளங்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்ட சீனிவாச பெருமாள் கோயிலில் நேற்று புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும்,மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு தீபாராதனையும் நடந்தது. வழிபாடு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குடும்பத்துடன் அர்ச்சனை செய்து சுவாமியை வணங்கி வழிபட்டனர். அப்போது அனைவருக்கும் நைவேத்திய பிரசாதங்களும் விநியோகிக்கப்பட்டது.

வெங்கடேசபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பூத நாராயண பெருமாள் உற்சவமூர்த்தி

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top