திருவண்ணாமலையில் வன உயிரின வார விழாவை ஒட்டி ஒப்படைக்கப்பட்ட நாட்டு துப்பாக்கிகள் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் , முன்னிலையில் ரோடு ரோலரால் அழிக்கப்பட்டன.
திருவண்ணாமலை வனக்கோட்டத்தில் வன உயிரின பாதுகாப்புச் சட்டம், 1972ன் கீழ் வன விலங்குகளை திறம்பட பாதுகாக்கவும், சட்ட விரோத வேட்டையை தடுக்கவும், சட்ட விரோத நாட்டுத்துப்பாக்கிகளை தானாக முன் வந்து வனப்பகுதிகளில் வாழும் மக்கள் ஒப்படைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை வனக்கோட்டத்தில் உரிமம் இல்லாமல் சட்ட விரோத துப்பாக்கிகள் வைத்திருக்க வாய்ப்புள்ள கிராமங்களின் பட்டியல் வனச்சரக வாரியாக தயாரிக்கப்பட்டது.
பின்பு மேற்படி கிராமங்களில் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு செய்தல், பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டம் நடத்துதல், கிராம வனக்குழு மற்றும் சூழல் மேம்பாட்டுக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நடத்துதல், வனம் மற்றும் வன உயிரின குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் குற்றவாளிகளிடம் உரையாடுதல், களப்பணியாளர்கள் மற்றும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தல், பொதுமக்களுடன் விழிப்புணர்வு அணி வகுப்பு நடத்துதல், வன உரிமைச்சட்டத்தின் கீழ் உரிமை பெற்றவர்களின் கடமைகளை எடுத்துரைத்தல் போன்ற செயல்பாடுகள் களப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு கிராமங்களிலும் களப்பணியாளர்களால் குறிப்பிடப்பட்ட பொதுவான இடங்கள், மறைவான இடங்கள், கிராமக் கோவில்கள் போன்ற இடங்களில் பொதுமக்கள் தானாக முன் வந்து துப்பாக்கிகளை வைத்தனர். அவ்வாறு வைக்கப்பட்ட 125 சட்ட விரோத துப்பாக்கிகள் 9 வனச்சரகங்கள் மூலம் கைப்பற்றப்பட்டு ரோடு ரோலர் கொண்டு அழிக்கப்பட்டது.
அதிகபட்சமாக நாடானூர் வனச்சரகத்தில் – 41, இதர சரகங்களான சந்தவாசல் – 22, மேல்பட்டு – 19, போளூர் – 17, ஜமுனாமரத்தூர் – 15, தானிப்பாடி – 3, சாத்தனூர – 3, திருவண்ணாமலை – 3, செங்கம் – 2 ஆகிய எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
தீவிரமான பொது ஈடுபாட்டின் விளைவாக பல கிராம வாசிகள் சட்ட விரோத துப்பாக்கிகளை தாங்களாகவே முன் வந்து ஒப்படைத்து, அதன் மூலம் வன விலங்குப் பாதுகாப்பிற்கு பங்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், மாவட்ட வன அலுவலர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், உதவி வனப்பாதுகாவலர் வினோத்ராஜ், வனச்சரக அலுவலர்கள் முருகன், குணசேகரன், வெங்கடாச்சலம், விஜயசாரதி, மணிகண்டன், தமிழரசன், கமலாசணன், கோகுல்நாத், சக்திவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




