நாமக்கல் மாநகராட்சி சார்பில் செறிவூட்டப்பட்ட இயற்கை உரம் விற்பனை துவக்க விழா, உழவர் சந்தையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி முதல் விற்பனையை துவக்கி வைத்து பேசியதாவது:
நாமக்கல் மாநகராட்சியின் சார்பில், மக்கும் குப்பைகளை மதிப்புமிக்க இயற்கை உரமாக மாற்றி, பொதுமக்களுக்கு ஒரு கிலோ ரூ.20 என்ற விலையில் விற்பனை செய்வதுடன், விவசாயிகளுக்கு இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகள், மாநகராட்சியின் 7 நுண்ணுயிர் உரச் செயலாக்க மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இயந்திரங்கள் மூலம் அரைக்கப்பட்டு இயற்கை உரமாகத் தயாரிக்கப்படுகிறது.
இந்த இயற்கை உரம் தரமான முறையில் பைகளில் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களாக நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.20 என்ற விலையில் 541 கிலோ இயற்கை உரம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்திலும் இந்த உரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மக்கும் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2025-26 செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 3,531 டன் இயற்கை உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குப்பைகளை வீணாகக் கொட்டாமல், அவற்றை முறையாகப் பிரித்து சேகரித்து, மக்கும் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றுவதன் மூலம் மாநகராட்சியில் உருவாகும் கழிவுகளின் அளவைக் குறைப்பதோடு, கழிவுகளை வளமாக மாற்றும் நிலையான திடக்கழிவு மேலாண்மை நடைமுறையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கூறினார்.




