காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகையைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் ராகுல் கோ பேக் போராட்டம் நடத்தப்படும் என, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பயங்கரவாதத் தாக்குதலின்போது பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானி, கேப்டன் ஸ்மித் மச்சார் விரைவில் குணமடைந்து, இந்தியா திரும்ப வேண்டும். வங்காளதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ள சுவாமி சின்மாய் விடுதலை செய்ய வேண்டும். அங்குள்ள சிறுபான்மை இந்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, இந்திய அரசு, தூதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரபு நாட்டில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கைத் தமிழர் அனேஜன் சிவராஜனை மீட்க, இலங்கை, இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலை உச்சியில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி, தீபம் ஏற்றி சிறப்பு பிராத்தனை செய்தார்.
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தமிழக வருகையைக் கண்டித்து, தமிழகம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில், 10ம் தேதி ஜனநாயக முறையில், ‘ராகுல் கோ பேக்’ போராட்டம் நடத்தப்படும். சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம், பண பலத்தால் வெற்றி பெறப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில், ஜனநாயகம், பணநாயகமாக மாறி உள்ளது. தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியைக் கொண்டுவர இந்து மக்கள் கட்சி தொடர்ந்து செயல்படும் என்று கூறினார்.




