Close
அக்டோபர் 11, 2026 9:37 மணி

நவராத்திரி கொலு: மகா மாரியம்மன் கோயிலில் புதிய வரவாக நாமக்கல் நாமகிரி தாயார்

நவராத்திரியை முன்னிட்டு, செல்லப்பம்பட்டி மகாமாரியம்மன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கொலுவில், புதிய வரவாக, நாமக்கல் நாமகிரி தாயார் சமேத நரசிம்மர், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் பொம்மை இடம் பெற்றுள்ளது.

நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியில், மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், நவராத்திரி விழா கோலாகலமாக நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு, 15ம் ஆண்டாக, நவராத்திரி விழா துவங்கியது. வரும், 19 வரை நடக்கும் இவ்விழாவில், தினமும், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

முதல் நாளான இன்று சுவாமி திருவெற்றியூர் வடிவுடையம்மன் அலங்காரத்திலும், நாளை (அக்., 12), மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரம், அக்., 13, தஞ்சை வராகி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்.

அக்., 14ல், கீழ் திருப்பதி அலர்மேல் மங்கை அலங்காரம், 15ல் ஆணைமலை மாசாணி அம்மன் அலங்காரம், 16ல், புன்னைநல்லூர் மாரியம்மன் அலங்காரம், 17ல் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் அலங்காரம், 18ல் சுயம்பு மகாமாரியம்மன் அலங்காரம், 19ல் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மேலும், நவராத்திரி நாட்களில், ஆன்மிக சொற்பொழிவுகள், பரதநாட்டியம், பக்தி பாடல்கள், பஜனை போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கிறது. கடைசி நாளான, அக். 19ம் தேதி மாலை 6 மணிக்கு, நவராத்திரி சிறப்பு ஹோமம் நடக்கிறது.

மேலும், மகாமரியம்மன் கோயிலில், நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது. அதில், புதிய வரவாக, நாமக்கல் நாமகிரி தாயார் சமேத நரசிம்ம சுவாமி, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கொலு பொம்மை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்பாடுகளை, ஊர்பொதுமக்கள், மகாமாரியம்மன் வார வழிபாட்டு மன்றத்தினர் செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top