Close
அக்டோபர் 25, 2026 9:08 காலை

விவசாயிகளுக்கு உடனடியாக தட்கல் மின் இணைப்பு வழங்க கோரிக்கை

விவசாயிகளுக்கு உடனடியாக தட்கல் மின் இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டத.

நாமக்கல் மாவட்டத்தில் தட்கல் மின் இணைப்பு பெறுவது சம்பந்தமாக விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் டாக்டர் நித்திய சர்வானந்தா தலைமையில் நடைபெற்றது. விவசாய முன்னேற்றக் கழக மாநில பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு என்பது 24 மணி நேரத்தில் ஒருவருக்கு மின் இணைப்பு வழங்கக்கூடிய திட்டமாகும். நாமக்கல் மாவட்டத்தில், 2,500க்கு மேற்பட்ட விவசாயிகள், தட்கல் முறையில் பணம் செலுத்தி ஒரு ஆண்டிற்கு மேலாக மின் இணைப்பு வேண்டி காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். மதுரை ஐகோர்ட் கிளையில் நடைபெற்று வரும் தட்கல் மின் இணைப்பு சம்பந்தமான வழக்கை விரைந்து முடித்து விவசாயிகளை காக்க வேண்டும்.

தமிழகத்தில் தட்கல் முறையை நீக்கிவிட்டு பழைய நடைமுறையில் மின் இணைப்புக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் காக்க வைக்காமல் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய மின் இணைப்புகள் குறித்து, தமிழக முதல்வர் தலைமயில், மின்சாரத்துறை அமைச்சர், மின்வாரிய தலைவர், செயலாளர் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் முத்தரப்பு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சிப்காட் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ரவீந்திரன், கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் பெருமாள், நாமகிரிப்பேட்டை விமுக செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சிப்காட் எதிர்ப்பு குழு தலைவர் ராம்குமார் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top