நாமக்கல் மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், மின் மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதால், இன்று 24, நாளை 25ம் தேதி நாமக்கல் பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாநகராட்சிக்கு ஜேடர்பாளையம் குடிநீர் திட்டத்தின் மூலம் தினசரி 18 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் பருவமழையின் காரணமாக, கபிலக்குறிச்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உயர்மின் அழுத்த இணைப்பில் ஏற்பட்ட பழுதின் காரணமாக, 2 மின்மோட்டார்கள் பழுதடைந்துள்ளன.
இதனால், தற்போது ஒரு மின்மோட்டார் மட்டுமே இயங்கி வருவதால், தினசரி 8 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மோட்டார்கள் சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே இன்று 24 மற்றும் நாளை 25ம் தேதி, நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் சீரான குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.




