Close
நவம்பர் 26, 2026 5:44 மணி

மாவட்டத்தில் நடைபெறும் மத்திய அரசின் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்: திசா கமிட்டி தலைவர்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசின் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என திசா கமிட்டி தலைவர் மாதேஸ்வரன், எம்.பி., அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (திசா) கூட்டம் நடந்தது. குழுவின் தலைவரும், நாமக்கல் எம்.பி.,யுமான மாதேஸ்வரன் தலைமை வகித்தார்.

மாவட்ட ஆட்சியர் மதுபாலன், எம்.பி.,க்கள் ராஜேஷ்குமார், பிரகாஷ், ப.வேலூர் எம்.எல்.ஏ., சேகர், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், மத்திய அரசின் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டம், தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார திட்டம் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஜல்ஜீவன் திட்டம், தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், நாமக்கல் நகருக்கு ரிங் ரோடு அமைக்கும் பணி, தூய்மை இந்தியா திட்டம், எம்.பி. தொகுதி மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, பணிகள் அனைத்தும், திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி தரமாகவும், குறித்த நேரத்திலும் முடிக்க வேண்டும் என, குழுவின் தலைவரும், எம்.பி.,யுமான மாதேஸ்வரன் கூறினார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்திரா, மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜி, ஆர்.டி.ஓ.,க்கள் சாந்தி, லெனின் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top