Close
நவம்பர் 26, 2026 5:44 மணி

பண்பாடு மற்றும் மரபுகளை கொண்டுள்ள திருவண்ணாமலை மாவட்டம்: ஆட்சியர் பெருமிதம்

மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்

திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தின் தொன்மையான வரலாறு கட்டடக் கலை மரபுகளை கொண்டுள்ளது  என திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் நடந்த வரலாற்றுத் துறை தொடக்கவிழாவில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் பெருமிதத்துடன் கூறினார்.

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் வரலாற்று தொடக்கவிழா – 33வது தமிழ்நாடு பேரவை நிகழ்ச்சி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி முதல் நாளான நேற்று வரலாற்று துறை தொடக்கவிழா மற்றும் 33வது தமிழ்நாடு பேரவை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் கல்லூரி வரலாற்று துறை தலைவரும் இணைபேராசிரியருமான ஸ்தனிஸ்லாஸ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரேவதி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தொடக்க விழாவுக்கு தலைமையேற்று மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தின்தொன்மையான வரலாறு, பண்பாடு, சமயம், கலை மற்றும் கட்டட கலை மரபுகளை தன்னகத்தே கொண்டுள்ள சிறப்புமிக்க மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் வரலாறு சங்க காலம் தொடங்கி பல்லவர், சோழர், பாண்டியர், சம்புவராயர், விஜயநகர பேரரசு மற்றும் நாயக்கர் ஆட்சிகாலம் வரை பல்வேறு வரலாற்று கூறுகளை உள்ளடக்கி உள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இம்மாவட்டத்தின் முக்கியமான ஆன்மீக மற்றும் வரலாற்று சின்னமாக விளங்குகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் கல்வெட்டுகள், நடுகற்கள், தொல்லியல் சான்றுகள், பழமையான கோவில்கள் மற்றும் சிற்பங்கள் ஆகியவை இப்பகுதியின் அரசியல் சமூகபொருளாதார மற்றும் சமய வரலாற்றை அறிந்துகொள்வதற்கான முக்கிய ஆவணங்களாக திகழ்கின்றன.

மேலும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல போர்கள் நடைபெற்றன. அதில் ஆரணி போர் கி.பி. 1751, வந்தவாசி போர் கி.பி. 1760ல் நடைபெற்றது. இந்தியா விடுதலைக்கு பிறகு 1989ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் நாள் திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் உருவாக்கப்பட்டது .

இப்பேரவையின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தின் வரலாறு பங்களிப்பையும் தமிழகத்தின் ஒட்டுமொத்த வரலாறு மற்றும் பண்பாட்டு வளர்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டம் பெற்றுள்ள முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்க இயலும். இந்த பகுதியில் காணப்படும் வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதற்கும், எதிர்கால தலைமுறையினருக்கு அவற்றின் சிறப்புகளை எடுத்துச்செல்வதற்கும் வழிவகைகளை தமிழ்நாடு வரலாற்று பேரவை ஆராயும் என்றார்.

நிகழ்ச்சியில் டெல்லி பல்கலைக்கழக தலைவர் பேராசிரியர் வெங்கடசுப்பிரமணியன், 33வது பேரவை பொதுச் செயலாளர் பாலாஜி, பொருளாளர் சுந்தரம், பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இம்மாநாட்டில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து பேராசிரியர்கள், அனைத்து துறைசார்ந்த துறை தலைவர்கள், இணை பேராசிரியர்கள் ,ஆய்வு மாணவர்கள் மற்றும் முதுகலை மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top