Close
நவம்பர் 26, 2026 5:44 மணி

தீபத் திருவிழாவை முன்னிட்டு அவசரகால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. காவல் தெய்வமானதுர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 12-ம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலம் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் மாதம் 24ம் தேதி தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

இதைக் காண 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி தீ விபத்து மற்றும் கூட்ட நெரிசல் போன்ற அவசர சூழல்களில் காயமடைந்தவர்களை மீட்பது குறித்து கோவில் ராஜகோபுரம் முன்பு பொது சுகாதாரத்துறை சார்பில் அவசரகால மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

இதில், தீ காயம் அடைந்த நபர்களை மீட்புக் குழுவினர் விரைந்து சென்று பாதுகாப்பாக மீட்டு முதலுதவி மற்றும் அவசரகால மருத்துவ உதவிகளை வழங்கி, அவசர கால ஊர்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்ற துரித நடவடிக்கைகள் தத்ரூபமாக மேற்கொள்ளப்பட்டன.

மேலும், அவசரகால சூழ்நிலைகளில் பொதுமக்கள் பதற்றமடையாமல் செயல்படுதல், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளித்தல், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்து விரைவான சிகிச்சைக்கு வழிவகுத்தல், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், கலந்து கொண்டு ஒத்திகை நிகழ்ச்சியினை பார்வை விட்டார்.

மேலும், இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் எட்வினா வசந்தா, இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) கவிதா, மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் மாலதி, மாவட்ட தீயணைப்பு கண்காணிப்பாளர் மணி, பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புத்துறை வட்டாட்சியர் ராஜேஸ்வரி, மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவ கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top