காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் 155 டாஸ்மாக் மதுக் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுப்பிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை வாபஸ் பெற்று, மாற்று வழியில் அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 155 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என 800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்லில் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் நீதிநாயகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும். பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு நடைமுறையை மாற்றி பழைய நடைமுறையை தொடர
வேண்டும். கோர்ட்டு உத்தரவுப்படி, மாநில அரசு, டாஸ்மாக் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
வழக்கமாக மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது வழக்கம். இன்று கடைகள் திறக்கப்படாததால் மதுப்பிரியர்கள் அவதிக்குள்ளானார்கள். மாவட்டம் முழுவதும் 155 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் ரூ. 5 கோடி அளவிற்கு விற்பனை பாதிக்கப்பட்டதாகவும், நேற்று பரமத்தி வேலூர் பகுதியில் 2 ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து 12 கடைகள் மூடப்பட்டதால் ரூ. 40 லட்சம் அளவிற்கு விற்பனை பாதிக்கப்பட்டதாகவும் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.




