கல்லறை திருநாளான இன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்துபோன, தங்களது உறவினர்கள் மோட்சம் அடையவேண்டி, பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள், ஆண்டு தோறும், நவம்பர் 2ம் தேதி, இறந்துபோன தங்களது உறவினர்களை வழிபடும் வகையில், கல்லறை திருநாளாக கொண்டாடுகின்றனர். அன்றையதினம், கல்லறைகளுக்கு சென்று சுத்தம் செய்து சீரமைப்பார்கள்.
தொடர்ந்து, தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கின்றனர். அதையடுத்து, மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து, இறந்த ஆத்மாக்கள் மோட்சம் அடைய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபடுவர்.
அதன்படி, நாமக்கல் அடுத்த மோகனூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள், காட்டுப்புத்தூர் ரோட்டில் உள்ள புனித செல்வநாயகியம்மாள் ஆலய வளாக கல்லறையில், இறந்துபோன தங்களது உறவினர்களின் கல்லறைக்கு சென்று வழிபட்டனர்.
அதேபோல், ஆர்.சி .பேட்டப்பாளையத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும், கல்லறைகளுக்கு சென்று வழிபட்டனர்.
முன்னதாக, பங்குத்தந்தை ஸ்டீபன்ராஜ் தலைமையில், காலை, 7:30 மணிக்கு, சிறப்பு திருப்பலி நடந்தது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லறைகளில், கிறிஸ்தவர்கள் இறந்துபோன தங்கள் உறவினர்கள் மோ ட்சம் அடைய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.




