நாமக்கல் சந்தைபேட்டைபுதூரில் வெள்ளையப்பன், வெள்ளயைம்மன், மஹா கணபதி, பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்கள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதையொட்டி, 31ம் தேதி அதிகாலை மஹா கணபதி, லட்சுமி, சுதர்சனம் மற்றும் நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் கோயிலை வந்தடைந்தனர்.
அன்று மாலை வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு கோபுர கண் திறத்தல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.
1ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. பின்னர், அதிர்வேட்டு முழங்க தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கோயில் கோபுரம் மற்றும் மகா கணபதி, வெள்ளையப்பன், வெள்ளையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் சந்தைபேட்டைபுதூர் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.




