திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
திருவண்ணாமலை நகரம் ஆன்மிக மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள், முதியவர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, திருவண்ணாமலை நகரின் நான்கு மாடவீதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்குப் போதிய பொதுப் போக்குவரத்து வசதி இல்லாததால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில்;
அண்ணாமலையார் திருக்கோவில் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் ரயில் நிலையங்களுக்கு செல்ல அதிக தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம்.
ஆட்டோக்களை மட்டும் நம்பி உள்ளோம் ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்கும் தொகையை கேட்டவுடன் மயக்கமே வந்துவிடுகிறது, பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் தினசரி போக்குவரத்து சிரமங்களை எதிர்கொள்கிறோம்.
மேலும் மாவட்ட தலைமை மருத்துவமனை, ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதி மிக குறைவாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை நகரில் நான்கு மாட வீதிகள் வழியாகவும், முக்கியமான பகுதிகளை இணைக்கும் வகையில் அரசு நகரப் பேருந்து வழித்தடம் உருவாக்கித் தர வேண்டும்,
பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்ற சாலை அகலம், போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசு நகரப் பேருந்துகளைத் தொடர்ந்து இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை நகரின் நான்கு மாடவீதிகள் வழியாக அரசு நகரப் பேருந்துகளை இயக்குவதற்கான உரிய ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, பொதுமக்களின் நீண்டகால போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்தனர்.
திருவிழா காலங்களை தவிர்த்து மற்ற நாட்களில் திருக்கோவில் மாடவீதி வழியாக நகரத் பேருந்துகள் மட்டும் இயக்கலாம் எனத் தெரிவித்தனர்.,
மேலும் மாதம் பல கோடி ரூபாய் பக்தர்கள் மூலம் அண்ணாமலையார் கோவிலுக்கு உண்டியல் காணிக்கை வருகின்றது. திருக்கோவில் நிர்வாகம் மூலமாக புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆட்சியர் அலுவலகப் பகுதி, கிரிவலப் பாதைக்கு திருக்கோவில் நிர்வாகமே சிறப்பு பேருந்துகளை உரிய அனுமதியுடன் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என கருத்து தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களில் புறவழிச் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் குழுக்கள் அமைத்து ஆட்டோ ஓட்டுநர்களை கண்காணிக்க வேண்டும், சாலை விதிகளை மதிக்காத ஆட்டோக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆன்மீக பக்தர்கள், திருவண்ணாமலை பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்கும் தொகையை பக்தர்கள் கேட்டவுடன் மயங்கி விழாத குறை தான். இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணிப்பதற்கு ஒருவருக்கு ரூபாய் 200க்கு மேல் கேட்பதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்துனர்.




