செஞ்சியில் காணாமல் போன சிறுமியை, சேந்தமங்கலத்தில் பார்த்ததாக, அங்கன்வாடி பணியாளர் கூறியதால், அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா கடந்த அக்டோபர் 12-ம் தேதி அதிகாலையில் திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், நாமக்கல் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் பவானி (35). இவர் கோனானூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் 29-ந் தேதி. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள, தத்தகிரி முருகன் கோயிலில், ஒரு தம்பதியினருடன் சிறுமி ஹேமலதாவை பார்த்ததாக, அவசர புகார் எண் 100 க்கு அழைத்து சிறுமி குறித்த தகவலை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பவானியிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரடியாக நாமக்கல் வந்து பவானியிடம் துருவி துருவி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள்.
இது குறித்து பவானி கூறியதாவது: நான் கடந்த 23-ந் தேதி செஞ்சியில் காணாமல் போன சிறுமி போன்ற ஒருவரை, சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயில் அருகில் பார்த்தேன். உடன் 2 பேர் இருந்தனர். அவர்களுக்கு 55 வயது, 35 வயது இருக்கும். தம்பதி போல இருந்தனர்.
இந்த நிலையில் 29-ந் தேதி எனது வீட்டில் செல்போனில் வந்த சிறுமி மாயமான செய்தியைப் பார்த்தேன். அந்த சிறுமி நான் பார்த்த சிறுமியை போலவே இருந்தார். ஏறத்தாழ 90 சதவீதம் அவராக இருக்கலாம் என்பதால் நான் இது குறித்து 100 எண்ணிற்கு போன் செய்து போலீசிடம் தெரிவித்தேன். என்னிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர்.
இந்த நிலையில் நான் பணிபுரியும் இடத்திலும், நான் வசிக்கும் இடத்திலும் என்னைப் பற்றி விசாரிக்கிறார்கள். நான் மனிதாபிமான அடிப்படையில்தான் கூறினேன். என்னிடம் விவரங்களை வாங்கிக் கொண்டு, தொடர்ந்து மனஉளைச்சல் தருகிறார்கள். எதற்காக சிறுமி குறித்த தகவலை கூறினோம் என, மனதிற்கு கஷ்டமாக உள்ளது என்று கூறினார்.




