Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

இத்தாலிய பாஸ்போர்ட் என் அடையாளத்தின் ஒரு பகுதி: சுயசரிதையில் சோனியா காந்தி

சோனியா காந்தி எழுதிய ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ சுயசரிதை புத்தகத்தில் தனது இத்தாலியக் குடியுரிமையைத் துறந்து இந்தியக் குடியுரிமையைப் பெற்ற தருணத்தில் தனக்கு ஏற்பட்ட தீவிரமான உணர்ச்சிகள் மற்றும் மனப்போராட்டங்கள் குறித்து அவர் விரிவாகப் பகிர்ந்துள்ளார்.

தனது இத்தாலிய பாஸ்போர்ட்டை இவ்வளவு காலம் வைத்திருந்தது மற்றும் அதைத் துறக்கத் தீர்மானித்தது குறித்து சோனியா காந்தி எழுதியுள்ளதாவது: நான் இத்தாலியில் இருந்து இந்தியா கொண்டு வந்த என் சொந்த அடையாளத்தின் ஒரு பகுதியாகவே எனது இத்தாலிய பாஸ்போர்ட்டைக் கருதி வந்தேன். என் தாய்நாட்டை நேசித்த என் தந்தை மற்றும் அவரது தோழர்கள் போராடிய இத்தாலியின் அடையாளமாக அது இருந்தது. மேலும், எனது பெற்றோரைப் பார்க்கச் செல்லவும் அது வசதியாக இருந்தது.

இருப்பினும், காலப்போக்கில் இத்தாலிக்கான தனது பயணங்கள் குறைந்துவிட்டதாகவும், அங்குள்ள வாழ்க்கை முறையோடு தன்னால் ஒன்றிணைய முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது குடும்பம், நண்பர்கள் அனைவரும் இந்தியாவிலேயே இருந்தனர். உணவு, ஆடை மற்றும் சிந்தனை முறையில் நான் முழுமையாக இந்திய மரபுகளை ஏற்றுக்கொண்டு விட்டேன். 1981-ல் ராஜீவ் காந்தி பொதுவாழ்விற்கு வந்து மக்களின் கவனத்தைப் பெறத் தொடங்கிய நிலையில், நானும் இந்தியக் குடியுரிமை பெற்று முறைப்படி இந்நாட்டை எனது இல்லமாக ஏற்றுக்கொள்வதுதான் சரியான முடிவு என்று தோன்றியது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்

இத்தாலியக் குடியுரிமையைத் துறக்கும் அதிகாரப்பூர்வ நடைமுறைகளின் போது தூதரகத்தில் நடந்த சம்பவங்களை அவர் விவரித்துள்ளார்: இத்தாலியத் தூதரின் இல்லத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வின் போது, அதிகாரி ஒருவர் ஆவணத்தை வழங்கி, ‘தான் குடியுரிமையைத் துறப்பதாகவும், பாஸ்போர்ட்டைச் ஒப்படைப்பதாகவும்’ உரக்கப் படிக்குமாறு கூறியதாக சோனியா காந்தி நினைவுகூர்ந்துள்ளார்.

அந்த ஆவணத்தை உரக்கப் படித்தபோது எனக்குள் கடுமையான உணர்ச்சிப் போராட்டம் ஏற்பட்டது. என் இதயத் துடிப்பு அதிகரித்தது; முகம் சூடானது; என் பதற்றத்தை என்னால் மறைக்க முடியவில்லை. திருமணத்தின் போது எனது பெயரை மாற்றி, என் பழைய அடையாளத்தின் ஒரு பகுதியை விட்டுக் கொடுத்தபோது ஏற்பட்ட அதே மன உளைச்சல் மீண்டும் ஏற்பட்டது. இத்தாலியில் இருந்து நான் கொண்டு வந்த அந்தச் சிறிய அடையாளமும் அன்றோடு என்றென்றும் விடைபெற்றுச் சென்றுவிட்டது என்று சோனியா காந்தி உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

பாஜ தலைவர்கள் பலர் சோனியா காந்தியின் குடியுரிமை குறித்துப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் சூழலில், அவர் தனது சுயசரிதையில் பகிர்ந்துள்ள இந்தத் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top