Close
நவம்பர் 26, 2026 5:25 மணி

டில்லியின் முதல் சுற்றுலா படகு சேவை தொடக்கம்!

டில்லி தலைநகர் மக்களுக்கு ஒரு புதிய சுற்றுலா அனுபவத்தை வழங்கும் வகையில், யமுனை நதியில் ‘நமோ யமுனா ரிவர் சஃபாரி’ என்ற பெயரிலான டில்லியின் முதல் பொழுதுபோக்கு கப்பல்/படகு சேவையை டில்லி அரசு தொடங்கியது.

மத்திய அரசு, டில்லி அரசு மற்றும் டில்லி மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை, சோனியா விஹாரில் நடைபெறும் விழாவில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா, லெப்டினன்ட் கவர்னர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் அமைச்சர் கபில் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் முறைப்படி தொடங்கி வைத்தனர்.

சோனியா விஹாரில் இருந்து ஜகத்பூர் வரை 6 கிமீ தூரத்திற்கு சுற்றுப்பயணமாக இந்த படகு சேவை இயக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். இதற்கான பயணச்சீட்டுகளை ஆன்லைன் மற்றும் நேரிடையாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

இது குறித்து டில்லி அமைச்சர் கபில் மிஸ்ரா கூறுகையில், சோனியா விஹார் பகுதியில் படகு சவாரி மட்டுமன்றி குடும்பத்துடன் வந்து மகிழும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான விளையாட்டு பகுதி, உணவகங்கள் மற்றும் வணிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு மாலையும் கிருஷ்ணர் மற்றும் யமுனை மாதாவின் சிறப்புகளை விளக்கும் இசை நீரூற்று நிகழ்ச்சியும் நடைபெறும். வரும் நாட்களில் படகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார்.

இத்திட்டம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா, யமுனா ரிவர் குரூஸ் சேவை டில்லிக்கு ஒரு முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது. தாய் யமுனையுடன் மக்களை மீண்டும் நெருக்கமாக இணைக்கவும், டில்லியின் நதிக்கரைக்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுக்கவும் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த நதி சுற்றுலா மற்றும் மின்சார நீர்ப்போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த ‘நமோ யமுனா ரிவர் சஃபாரி’ டில்லி மக்களின் புதிய பொழுதுபோக்கு மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top