திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 12-ம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் மாதம் 24-ந்தேதி தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலம் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கிரிவல பாதையில் கட்டண கழிப்பறைகள் உள்ளது. இந்தக் கட்டண கழிப்பறைகள் மாநகராட்சி மூலம் குத்தகைக்கு விடப்பட்டு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
பௌர்ணமி மற்றும் தீப நாட்களில் கிரிவலம் வரும் பக்தர்கள் இந்த கட்டண கழிப்பறைகளை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என ஆன்மீக பக்தர்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். அதேபோல் மாநகராட்சி எல்லைக்குள் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு வரி வசூலிக்கப்பட்டு வந்தது . இதனையும் திருவிழா காலங்களில் பக்தர்களின் வசதிக்காக இலவசமாக அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர்.
மாநகராட்சி தற்போது ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நவம்பர் 12 முதல் 28-ஆம் தேதி வரை திருவண்ணாமலை மாநகர எல்லைக்குள் வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது
மாநகராட்சி குத்தகை கழிப்பறைகள் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள கழிப்பறைகளிலும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
தடையை மீறி கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார்களுக்கு 74488 32392 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். வருகின்ற தீபத் திருவிழாவை முன்னிட்டு 12.11.26 முதல் 28.11.26 வரை கட்டணம் ஏதும் வசூலிக்க கூடாது. மேலும் குத்தகை நிபந்தனைகள் மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை மூலம் புகார் அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதுடன் குத்தகை உரிமத்தினை ரத்து செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு குறித்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் பௌர்ணமி மற்றும் திருவிழா நாட்களில் மட்டும் கிரிவலப் பாதையில் உள்ள கழிப்பறைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று இல்லாமல் எப்பொழுதும் கட்டணம் வசூலிக்க வேண்டாம் எனக் கோரிக்கை வைத்தனர்.




