Close
நவம்பர் 26, 2026 5:35 மணி

கோவை நூலகத்தில் நடைபெற்ற ஊழல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சகாயம் வேண்டுகோள்

கோவை பெரியார் நூலகத்தில் நடைபெற்ற ஊழல்களுக்க காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல் அருகே லத்துவாடியில் உள்ள நம்பிக்கை இல்லத்தில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழர்களிடையே, தாய்மொழி குறித்த பெருமித உணர்வை வளர்க்கும் நோக்கில், ‘இனி தமிழ் இயக்கம்’ உருவாக்கப்பட்டுள்ளது. தாய்மொழியான தமிழில் பேசினால், மரியாதை குறைந்துவிடும் என்ற என்னம் பலரிடம் காணப்படுகிறது.

இதனால், ஆங்கிலம் கலந்து பேசுவது, வடமொழி தாக்கம் கொண்ட பெயர்களை குழந்தைகளுக்கு வைப்பது போன்ற பழக்கங்கள் அதிகரித்துள்ளன. இது, தமிழர்களிடம் காணப்படும் அடிமை மனப்பான்மையின் வெளிப்பாடு. இந்த நிலையை மாற்றி, குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது, தமிழில் கையெழுத்திடுவது, உறவுகளைத் தாய்மொழியில் அன்போடு அழைப்பது, அன்றாட உரையாடல்களில் இயல்பான தமிழைப் பயன்படுத்துவது ஆகியவற்றை ஊக்குவிக்க உள்ளோம்.

கோவை பெரியார் அறிவுலகில், போலி பதிப்பகங்கள் மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் விவகாரம் வெட்கக்கேடானது. இது அறிவுத்தளத்தில் நடத்தப்பட்ட வன்முறை, பயங்கரவாதம் என்றே கருதுகிறேன்.

கடந்த, 30 ஆண்டுகளாக லஞ்சம், ஊழலுக்கு எதிராகப் போராடி வருகிறேன். ஊழல் என்பது தனிநபர்களை மட்டுமல்லாமல், புத்தங்களையும் பாதிக்கும் என்பதற்கு இந்த சம்பவம் சான்றாக அமைந்துள்ளது. இது நூலக கொள்முதலா அல்லது நூதன கொள்ளையா என்று கேட்கக்கூடிய அளவிற்கு, ஒரு அறிவுத்தலத்தில், ஊழல்வாதிகளால் நடத்தப்பட்ட வன்முறை என்று, கருதுகிறேன்.

போலி எழுத்தாளர்களைக் கொண்டு ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புத்தகங்களை உருவாக்கி, அவற்றைத் தவறான மற்றும் பிழையான தகவல்களுடன் அடுத்த தலைமுறைக்கு வழங்கும் அறிவு மோசடி நடைபெற்றுள்ளது.

எனவே, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, இந்த முறைகேட்டில் தொடர்புடைய போலி பதிப்பகங்கள் மற்றும் ஊழல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும். இதனைத் தமிழ் மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top