நாமக்கல் மாவட்டத்ததில் சுகாதார துறையில் காலியாக உள்ள, 28 ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டம் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையின் கீழ் நாமக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவனையில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள், தேசிய நலவாழ்வு குழும விதிகளின்படி முற்றிலும் தற்காலிகமாக மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
அதன்படி ஆயுஷ் மருத்துவ அலுவலர், மருந்து வழங்குபவர், பல்நோக்கு பணியாளர், சிகிச்சை உதவியாளர் (பெண்), நர்சிங் தெரபிஸ்ட், மருத்துவ அலுவலர் என மொத்தம் 28 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த காலி பணிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் இதர தகவல்கள், மாவட்ட வெப்சைட்டில் (namakkal.nic.in) மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சுகாதார அலுவலகம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், சேலம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட உள்ளது.
இந்த பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் உரிய படிவத்தில் கல்வித்தகுதி, அனுபவச்சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமோ வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நல வாழ்வு சங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், நாமக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




