Close
நவம்பர் 26, 2026 5:44 மணி

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு 25 இடத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம், 155 இடத்தில் கார் பார்க்கிங்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 25 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், 155 இடங்களில் கார் நிறுத்துமிடங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 12-ம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலம் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவம்பர் மாதம் 24-ந்தேதி தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இதைக் காண 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோவிலில் இந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை கோவிலுக்குள் இருந்து தரிசிப்பதற்கான கட்டண தரிசன டிக்கெட் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது சாதாரண பக்தர்களும் எவ்விதக் கட்டணமுமின்றி தீப தரிசனம் காண வழிவகை செய்கிறது.

3,000 பக்தர்களுக்கு ஆன்லைனில் இலவச அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. திருவண்ணாமலையைச் சேர்ந்த 1,500 பேருக்கும், வெளியூர் பக்தர்கள் 1,500 பேருக்கும் பாஸ் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் 2026 ஆம் ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 12ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் நவம்பர் 24ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கும், மகா தீபம் அதே நாளில் மாலை 6 மணிக்கும் ஏற்றப்பட உள்ளது.

இந்த விழாவைக் காண சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, காவல்துறை, கோயில் நிர்வாகம் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் இணைந்து, பக்தர்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் விழாவில் பங்கேற்கும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்த மேலாண்மைக்காக சுமார் 25 தற்காலிக பேருந்து நிலையங்களும், புதிதாக ஒரு நிரந்தர பேருந்து நிலையமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பேருந்து நிலையங்களில் சுமார் 2,730 பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது.

மேலும், பக்தர்களின் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்காக 155 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகைக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விழாவைச் சுமுகமாக நடத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என ஆட்சியர் கூறியுள்ளார்.

தொடர்ந்து திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், அருணாசலேசுவரர் திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அருணாசலேசுவரர் திருக்கோயிலில் உள்ள காவல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top