Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

வேட்டியை இழுத்து அவமதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி: 1998 அதிகார மாற்றத்தின் பின்னணி

1998ம் ஆண்டு மார்ச் 14 டெல்லி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் அசாதாரணமான அமைதி நிலவியது. காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி செயற்குழுக் கூட்டத்திற்குள் நுழைந்தபோது, அவரை வரவேற்கக்கூட பலர் எழுந்திருக்கவில்லை.

அப்போது பிரணாப் முகர்ஜி, சீதாராம் கேசரியின் சேவைகளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, சோனியா காந்தியை அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்கக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இதைக் கேட்டதும் கேசரியின் முகம் கோபத்தில் சிவந்தது; சமாதான முயற்சிகளை நிராகரித்துவிட்டு அவர் தனது அலுவலகத்திற்குச் சென்றார். சோனியா காந்தி பொறுப்பேற்கும் வரை கேசரி ஒரு கழிவறையில் பூட்டி வைக்கப்பட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

அன்றைய தினம் அவர் அங்கிருந்து வெளியேறும்போது, சில இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் அவரைக் கேலி செய்ததோடு, அவரது வேட்டியை இழுக்கவும் முயன்றதாகக் கூறப்படுகிறது.

கேசரி இவ்வளவு நாடகத்தனமான முறையில் நீக்கப்பட்டது ஏன் என்பதைப் புரிந்துகொள்ள, அதற்கு முந்தைய ஆண்டுகளின் அரசியல் நிகழ்வுகளைப் பார்க்க வேண்டும்:

1991ம் ஆண்டில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சோனியா காந்தி அரசியலில் நுழைய மறுத்தார். சிறுபான்மை காங்கிரஸ் அரசின் பிரதமராகப் பி.வி. நரசிம்ம ராவ் பொறுப்பேற்றார்; அடுத்த ஆண்டில் காங்கிரஸ் தலைவருமானார். நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் முழு ஐந்தாண்டுக் காலமும் பிரதமராக இருந்த முதல் நிகழ்வு அதுதான்.

பாபர் மசூதி இடிப்பைத் தடுக்கத் தவறியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு, வாஜ்பாய் மீதான அணுகுமுறை ஆகியவற்றுக்கு மேலாக, போஃபர்ஸ் வழக்கில் ராஜீவ் காந்திக்கு எதிரான சிபிஐ வழக்கை ரத்து செய்த டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நரசிம்ம ராவ் எடுத்த முடிவே சோனியா காந்தியுடனான மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

1996 மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தி பிரச்சாரம் செய்யவில்லை; காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நரசிம்ம ராவ் பதவி விலகினார். அதன்பிறகு சரத் பவாரை வீழ்த்தி சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவரானார்.

சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே பீகார் காங்கிரஸில் தீவிரமாகச் செயல்பட்ட கேசரி, நீண்ட காலம் கட்சியின் பொருளாளராகவும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோரின் அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியவர்.

தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரின் பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களான முலாயம் சிங் யாதவ், கன்ஷி ராம், லாலு யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், நிதிஷ் குமார் ஆகியோருடன் அவர் நெருக்கம் காட்டினார். இதனால் கேசரி காங்கிரஸை ‘மண்டல்மயமாக்குகிறார்’ என்ற அச்சமும், இந்திப் பகுதியில் மேல்சாதியத் தலைவர்கள் ஓரங்கட்டப்படலாம் என்ற கவலையும் எழுந்தது.

மறுபுறம், தேவ கவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 1997-ல் கேசரி வாபஸ் பெற்றது பெரும் சர்ச்சையானது. தொடர்ந்து ஐ.கே. குஜ்ரால் பிரதமரானார். பின்னர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான ஜெயின் ஆணைய அறிக்கையின் ஒரு பகுதி கசிந்ததில், எல்.டி.டி.இ. தொடர்பாக திமுக மீது குற்றஞ்சாட்டப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. குஜ்ரால் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திமுக அமைச்சர்களை நீக்கக் கேசரி வலியுறுத்த, அதற்குக் குஜ்ரால் மறுத்ததால் ஐக்கிய முன்னணி அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்டது.

1998 மக்களவைத் தேர்தலின்போது, கட்சித் தலைவரான கேசரி பிரச்சாரத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு, சோனியா காந்தி முதன்மைப் பிரச்சாரகராகக் களமிறக்கப்பட்டார். சோனியா கூட்டங்களைக் கவர்ந்தபோதிலும் தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையவில்லை; அந்தத் தோல்விக்குக் கேசரியே காரணம் என்று சோனியா ஆதரவு அணியினர் குற்றம் சாட்டினர்.

பிரணாப் முகர்ஜி, சரத் பவார், ஜிதேந்திர பிரசாதா, ஏ.கே. அந்தோனி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, 1998 மார்ச் 5-ல் கூடிய காங்கிரஸ் செயற்குழு சோனியா காந்தி தலைமை ஏற்க வலியுறுத்தியது. நான்கு நாட்களுக்குப் பிறகு கேசரி ராஜினாமா அறிவித்தாலும் அதைத் திரும்பப் பெற்றார். இறுதியில் மார்ச் 14 அன்று அவர் நீக்கப்பட்டார்.

சோனியா காந்தி தலைவரான பிறகு நரசிம்ம ராவுக்குச் செயற்குழுவில் இடம் கிடைக்கவில்லை. 2004-ல் நரசிம்ம ராவ் காலமானபோது, அவரது உடலை டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்க அனுமதிக்கப்படவில்லை.

அதேபோல், பதவி நீக்கத்திற்குப் பிறகும் கேசரிக்கு அவமதிப்புகள் தொடர்ந்தன. மே 20, 1999 அன்று சோனியா காந்தியின் அதிகாரத்தைக் கேள்வி எழுப்பிய சரத் பவார், பி.ஏ. சங்மா, தாரிக் அன்வர் ஆகியோரை நீக்குவதற்காகக் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடந்தபோது கேசரி தாக்கப்பட்டார். ஏப்ரல் 2000-ல் அவரது பதவிக்காலம் முடிந்த பிறகு மாநிலங்களவைக்கு அனுப்பப்படாத அவர், அக்டோபர் 2000-ல் மறைவது வரை பொதுவெளியில் பெரிய அளவில் தென்படவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top