Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை மகா தீபம்

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள் பெற்றது திருவண்ணாமலை.

ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வேளைகளில் உற்சவா் விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகளும், இரவு வேளைகளில் உற்சவா் பஞ்சமூா்த்திகளும் மாட வீதிகளில் வலம் வருகின்றனா்.

ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி நட்சத்திரத்தின் அதிதேவதையாக எமதர்மராஜாவும், உரிய கிரகமாக சுக்கிரனும் போற்றப்படுகின்றனர். பாவங்கள் நீங்கி, தடைகள் விலகி, வாழ்வில் வளம் பெருக இந்த தீபம் ஏற்றப்படுகிறது. அதிகாலை 4:00 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் ஐந்து பரணி தீபங்கள் காட்டப்படும். இறைவனே பஞ்சபூதங்களாகவும், படைத்தல்-காத்தல்-அழித்தல்-மறைத்தல்-அருளல் ஆகிய ஐந்து செயல்களின் வடிவமாகவும் விளங்குகிறார் என்பதை இது குறிக்கிறது

அதிகாலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டு அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், பராசக்தி அம்மன் , சண்டிகேஸ்வரர் மற்றும் கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கோயிலின் கருவறையிலிருந்து கொண்டுவரப்பட்ட தீபத்தினை கொண்டு ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அருணாச்சலேஸ்வரர் கருவறையில் ஏற்றப்பட்ட இந்த பரணி தீபத்தினை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று கோவிலில் உள்ள அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகர் சன்னதி உள்ளிட்ட மற்ற சன்னதியில் பரணி தீபத்தினை ஏற்றினர். இந்த பரணி தீப தரிசன தரிசனத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கண்டுக்களித்தனர்.

முன்னதாக பரணி தீபத்தினை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது கோயிலில் சுமார் 1000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரணி தீப விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கட்டளைதாரர்கள் கலந்து கொண்டனர்

இன்று மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதற்காக மாலை 6 மணிக்கு தீபங்களை மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள அகண்ட தீப கொப்பரையில் ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளி வந்து காட்சி கொடுத்துவிட்டு உள்ளே சென்று விடுவார்.

அப்போது வாசல் வழியே பெரிய தீவட்டியை ஆட்டியபடி, மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். உடனே மலைமீது இருக்கும் பர்வதராஜ குலத்தைச் சேர்ந்தவர்கள், மலை மீது தயாராக வைக்கப்பட்டிருக்கும் செப்புக் கொப்பரையில் மகாதீபத்தை ஏற்றுவார்கள்.

இந்த மகா தீபமானது தொடர்ந்து 10 நாட்கள் அணையாமல் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top