Close
நவம்பர் 26, 2026 5:25 மணி

புத்தக விமர்சனம்: தினமணி தீபாவளி மலர்

இந்த தீபாவளிக்கு, வழக்கம் போல், மூன்று தீபாவளி மலர்கள்- ஆனந்த விகடன், இந்து தமிழ் திசை, தினமணி – வாங்கினேன். மற்ற இரண்டை விட, ஆன்மீகம்,இலக்கியத்திற்கு முதலிடமும்,சினிமாவிற்கு இரண்டாம் இடம் தந்தது தினமணிதான். படிக்க பாதுகாக்க உகந்த மலர் தினமணி தீபாவளி மலர்

இந்த ஆண்டு பகவான் சத்ய சாய்பாபாவின் (1926-2011) பிறந்த நூற்றாண்டு. அதைச் சிறப்பிக்கும் வகையில் சாய்பாபாவைப் பற்றி விரிவான கட்டுரைகள் மலரில் இடம் பெற்றுள்ளன.

உலகின் 120 நாடுகளில் பகவான் பாபா நிறுவிய ஸ்ரீ சத்திய சேவா நிறுவனங்களின் கிளைகள் அமைந்திருக்கின்றன. ‘அனைவரையும் நேசியுங்கள்; அனைவருக்கும் சேவை செய்யுங்கள் எல்லோருக்கும் எப்போதும் உதவுங்கள் எவரையும் எப்போதும் துன்புறுத்தாதீர்கள் என்பதுதான் வேதங்கள் உபநிஷதங்களின் சாரம்’ என்று தொடர்ந்து தன்னுடைய ஆன்மீக சொற்பொழிவுகளில் வலியுறுத்தி வந்த பகவான் பாபா தன்னுடைய சேவா நிறுவனங்களின் குறியீடாக அனைத்து மதங்களின் குறியீடுகளையும் ஒன்றிணைத்து வைத்தார்.

பகவான் பாபாவின் நிறுவனங்களின் நிழற்படங்களையும், அங்குள்ள முகப்புகளையும் பார்த்தால், அவற்றில் இந்து மதத்தின் குறியீடாகிய ஓம்; கிருஸ்தவ மதத்தின் குறியீடாகிய சிலுவை; இஸ்லாம் மதத்தின் குறியீடாகிய பிறைச்சந்திரன்; புத்த மதத்தின் குறியீடாகிய தர்ம சக்கரம் மற்றும் பாரசீக மதத்தின் குறியீடாகிய நெருப்பு ஆகியவை ஒன்றிணைந்து காணப்படும்…..

கல்விக்கும் மருத்துவத்துக்கும் பகவான் பாபா ஆற்றிய பணி மகத்தானதாகும். கல்வியும் மருத்துவமும் பணத்துக்கு அடிமை ஆகக் கூடாது என்று எப்போதும் வலியுறுத்தினார். அதனால்தான் புட்டபர்த்தி பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் பகவான் பாபா தோற்றுவித்த உயர் நோக்கு மருத்துவமனைகள் எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் நோயாளிகளுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் சிகிச்சை முடியும் வரை இலவசமாகவே சேவை செய்கின்றன.

ஒரு காலத்தில் அனந்தபூர் மாவட்டம் தண்ணீர் பற்றாக்குறையால் வறண்டு இருந்தது. ஆனால் பகவான் பாபாவின் முயற்சியால் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள 700 கிராமங்களுக்கு குடிநீர் வசதி கொண்டுவரப்பட்டது. -நீதிபதி வெ. இராமசுப்பிர மணியன் அவர்களின் “அன்பு மதம்” கட்டுரையில் பக். 12.

மாற்றம் வெளியில் இருந்து வராது.

கல்விதான் எல்லாத்தையுமே மாற்றும். வெறுமனே மாற்றம் என்று சொல்லிக் கிட்டிருக்கிறதுலே பிரயோசனம் இல்லே. மாற்றத்தை விரும்புகிறவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் தந்தாகணும். நம்ம சமூகத்தோட பிரச்சினை ஊழல்னு எல்லோரும் சொல்றோம். இதை எப்படி சமாளிக்கப் போறோம் ? எல்லா கெட்ட விஷயத்தின் மூலம் அறியாமை., கல்வி என்கிற என்கிற வெளிச்சம் மட்டுமே அறியாமை இருளைப்போக்கும். ரொம்ப கஷ்ட படற குடும்பங்களிலிருந்து வர்றவங்க கல்வியின் மூலமா நல்ல வாழ்க்கையை அடைஞ்சாங்கன்னா நிச்சயமா வழி தவற மாட்டாங்க.

ஊழலை ஒழிக்கணும்னா யாராவது மூணாவது ஆளு வந்து ஒழிச்சிட மாட்டாங்க. ஒவ்வொரு தனி மனிதனும் இதற்கான போராட்டத்தை நடத்தணும். எல்லோரும் கூடுதலாக ஏதோ ஒரு வசதியை எதிர்பார்க்கும் போதுதான் ஊழல் தொடங்குதுன்னு நினைக்கிறேன். சின்ன சின்ன விஷயங்களிலே கூட நாம ஊழலுக்கு எதிரா நின்றாகணும். நீங்க ஒரு வீட்டை பத்திர பதிவு அலுலகத்திலே பதிவு பண்ணும் போதுகூட முறையா எந்த விதிமுறையையும் மீறாம செய்யணும். இதுலே உங்களுக்கு சின்ன லாபத்தை எதிர்பார்த்து லேசா மீறினாகூட அதுவும் ஊழல்தான்.

இப்போதைய பிரச்சினை என்னன்னா நாம யாரைப் பின் தொடரணும் யாரை முன் நிறுத்தணும்கிற குழப்பம் எல்லோருக்கும் இருக்கும். இவர் ஒழுங்கா அவர் ஒழுங்கான்னு மாத்தி மாத்தி கேட்டுகிட்டிருக்கோம். நாம ஒழுங்கா இருந்தாதான் இவர் அவர் எல்லாம் ஒழுங்காவாங்கறதை நாம முதல்ல புரிஞ்சுக்கணும். அகரம் “சூர்யா பர்சனல் பக்கங்கள் ” உரையாடலில் பக். 202

தீபம் நா.பார்த்தசாரதி திரைத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த ஏ. வி. மெய்யப்ப செட்டியாரைச் சந்திக்கச் சென்றார். அவரையே கூர்ந்து பார்த்தார் செட்டியார். கம்பீரமான தோற்றம். கிரேக்க சிலை போன்ற முக அமைப்பு. சீரான பல்வரிசை. பிரபல நடிகர் தியாகராஜ பாகவதர் போன்ற தலைமுடி. ராமர் வேடத்திற்கு பொருத்தமான உருவம். கதாநாயகனாக நடிப்பதற்குரிய எல்லா லட்சணங்களும் நா.பாவிடம் இருந்தன.

ஆனால் நா.பாவிற்கு சரியான அறிவுரை கூறினார் செட்டியார்: “நீங்கள் மெத்தப் படித்தவர். அபாரமான எழுத்தாற்றல் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் திரைத்துறைக்கு வந்தால் அது எழுத்துத் துறைக்கு மிகப்பெரிய நஷ்டமாகிவிடும். எழுத்துத் துறையிலேயே இருங்கள்!”

காலம் செட்டியாரின் அறிவுரையை மிகச் சரியென நிரூபித்தது. தனி மனித ஒழுக்கத்தையும் சமூக ஒழுக்கத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி தம் வாழ்நாள் முமுவதும் நா.பா. எழுதிய லட்சியவாத எழுத்துக்கள் வாசகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றன.

நா.பா., ஜெயகாந்தன், கண்ணதாசன், சோ, ஆகிய நால்வரும் பெருந்தலைவர் காமராஜர் அணியில் ஸ்தாபன காங்கிரஸின் பேச்சாளர்களாக இயங்கினார்கள். இந்த நான்கு எழுத்தாளர்களிடையே ஆழ்ந்த நட்பு இருந்தது.

முக்கியமாக ஜெயகாந்தனுக்கும் நா.பாவும் எங்கும் எப்போதும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து பேசியதே இல்லை. ஒவ்வொரு ஜனவரி ஒன்றாம் தேதியன்றும் ஜெயகாந்தனை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் நா.பா. அப்போது’ தங்கம் தங்கமான கதைக் கருத்துக்களைக் குறித்துக் கொள்வதற்காக’ என எழுதிக் கையெழுத்திட்டு ஒரு டயரியை ஜெயகாந்தனுக்கு கொடுப்பது அவர் வழக்கம்.

ஒரு பிரபல பத்திரிக்கை குமரி அனந்தனையும், நா.பாவையும் உரையாடச் செய்து அந்த உரையாடலை அப்படியே அச்சில் வெளியிட்டது. அந்த உரையாடலில் குமரி அனந்தன் “உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார்?” என்று நா.பா.விடம் கேள்வி எழுப்பினார்.”ஜெயகாந்தன் ” என்று தயக்கமே இல்லாமல் உடனே பதில் சொன்னார் நா.பா.

“ஜெயகாந்த எழுத்து காட்டாறுமாதிரி, உங்கள் எழுத்து அருவி மாதிரி. எனக்கு உங்கள் எழுத்து பிடிக்கும் என்றார் குமரி அனந்தன். அதற்கு நா.பா. சொன்ன பதில் “எனக்கு காட்டாறு பிடிக்கும்!”

நா. பா. காலமானபோது எழுதப்பட்ட அஞ்சலிக்கட்டுரைகளில் முக்கியமானது ஜெயகாந்தன் எழுதிய கட்டுரை.’ என் தாயார் என் எழுத்துக்களின் ரசிகை என்பதை விட நா.பா எழுத்துக்களின் தீவிர ரசிகை’ என மனம் நெகிழ்ந்து குறிப்பிட்டிருந்தார் ஜெயகாந்தன். அந்த உன்னதமான கட்டுரையைப் படித்து ஆறுதல் அடைந்தார் நா.பா.வின் மனைவி சுந்தரவல்லி.

-எழுத்தாளர் நா.பார்த்தசாரதி பற்றி, பார்த்தது கற்றது வியந்தது தலைப்பில் “நாள்தோறும் எழுதினார் ” என்ற கட்டுரையில் திருப்பூர் கிருஷ்ணன்.பக். 268-269

வாசகர்களுக்கு. புதையல் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் தி.ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, வேம்பு (விக்கிரமன்) ஏ. ஜி. வெங்கடாச்சாரி ஆகியோரின் சிறுகதைகளை தேடி எடுத்து வழங்கி இருக்கிறார்கள்

மேலும் பிரபல எழுத்தாளர்கள் சோ. தர்மன், பா.முத்துக் குமரன், பவித்ரா நந்தகுமார், பொருனை வளவன் ஆகியோரின் சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன.

ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரின் நாவலை முழுமையாக தரும் வழக்கம் இந்த மலருக்கு உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு புகழ் பெற்ற, சி. சு. செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவல் தரப்பட்டுள்ளது. அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல் இது. கண்ணதாசன் நூற்றாண்டை ஒட்டி மலரில் விரிவான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

பார்த்தது, கற்றது வியந்தது என்ற தலைப்பில், ஜெமினி ஸ்டுடியோ, ஆனந்தவிகடன் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன், பத்திரிக்கைத் துறையில் சாதானை படைத்த குமுதம் எஸ். ஏ. பி. அண்ணாமலை, தினமணிக் கதிர், சாவி பத்திரிக்கைகளின் ஆசிரியரும், காந்தியோடு நவகாளி யாத்திரையில் பயணித்தவருமான சாவி, நாவலாசிரியர் மற்றும் தீபம் பத்திரிக்கை நிறுவனருமான நா.பா என்ற அழைக்கப்படும் நா.பார்த்தசாரதி, தொழில் அதிபரும், ஆன்மீகச் செம்மலுமான பொள்ளாச்சி மகாலிங்கம், எனக்குப் பிடித்த பத்திரிக்கையாளர் துக்ளக் ஆசிரியர் சோ என்கிற சோ.ராமசாமி, ஆகியோரைப்பற்றிய அரிய தகவல்களைத் தாங்கிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஆன்மீகம், ஆலய வழிபாடு, புகழ் பெற்ற ஆலயங்கள்,சங்க இலக்கியங்கள் தொடர்பான அருமையான கட்டுரைகள் மலரில் இடம்பெற்றுள்ளன.

நடிகர் அகரம் சூர்யாவின் நேர்காணல் இளையதலைமுறைக்கு பயனுள்ளது.

இன்னும் பல பல அரிய செய்திகள் அடங்கிய கட்டுரைகள் மலரை அலங்கரிக்கின்றன. படித்து,பாதுகாத்து இன்னும் சில ஆண்டுகள் கழித்து வாசித்தாலும் ஒவ்வொன்றும் புதுமையாக இருக்கும்.

கட்டுரையாளர்: வாசகர் பேரவை சா. விஸ்வநாதன்,  புதுக்கோட்டை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top