Close
நவம்பர் 26, 2026 7:16 மணி

தீபத்திருவிழாவில் குவிந்த 500 டன் குப்பைகள்: மழையில் அகற்றிய ஊழியா்கள்

கார்த்திகை தீப திருவிழா நாளான (நவ.24) மட்டும் திருவண்ணாமலைக்கு 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அன்றைய தினம் 10,000 பேருந்துகள், 25,000-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் 36,000-க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் நகருக்குள் வந்துள்ளன.

மேலும், பக்தர்களின் வருகையால் சேர்ந்த 500 மெட்ரிக் டன் குப்பைகளை 3,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உதவியுடன் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பக்தா்களின் வசதிக்காக மாவட்ட நிா்வாகம் மற்றும் ஆசிரமங்கள், ஆன்மிக அமைப்புகள், தன்னாா்வலா்களின் அறக்கட்டளைகள் சாா்பில் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதை மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் அன்னதானங்கள் வழங்கப்பட்டன. மேலும், குடிநீா், குளிா்பானங்களும் வழங்கப்பட்டன.

மகா தீபம் ஏற்றப்படும் போது, பக்தா்கள் சாலையோரங்களில் ஆங்காங்கே அகல் விளக்கேற்றியும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனா்.

இவ்வாறு வழிபட்ட பக்தா்கள் விட்டுச் சென்ற மண் அகல்விளக்குகள், எண்ணெய் புட்டிகள், நெகிழிப் பைகள் ஆங்காங்கே குவிந்து கிடந்தன.

அதனை தூய்மைப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் அதிகாலை முதல் தொடர்ந்து ஈடுபட்டனர். குறிப்பாக பிளாஸ்டிக் பாட்டில்கள், டீ குவளைகள், பாக்கு மட்டைகள் என டன் கணக்கில் பல்வேறு இடங்களில் குவிந்திருந்த குப்பைகளை தூய்மை பணியாளர்கள் கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அகற்றினர்.

கிரிவலப் பாதை ஆணாய்பிறந்தான் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை அகற்றும் பணியில் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையா் பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாமலை ஆகியோரது தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

மேலும் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் உத்தரவின் பேரில் தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா்களின் வழிகாட்டுதலின் பேரில் தூய்மைப் பணிகள் தொடா்ந்து நடைபெற்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top