இன்றைய தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது நமது வேலை செய்யும் முறையையும் பொருளாதாரத்தையும் எப்படி மாற்றியமைக்கும் என்பது குறித்து பல விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பிரபல மென்பொருள் நிறுவனமான ‘ஜோஹோ’ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஏ.ஐ தொழில்நுட்பம் குறித்து முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். கணினி வழியாகச் செய்யப்படும் எந்தவொரு பணியிலும் தற்போது ஒரு புதிய ஆபத்து உருவாகியுள்ளதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திறமையான ஒரு நபர் ஏ.ஐ-ஐப் பயன்படுத்தி 10 பேரின் வேலையைச் செய்ய முடியும். இந்த ஆபத்து நாளுக்கு நாள் நிஜமாகி வருகிறது” என்று எச்சரித்துள்ளார்.
இந்தக் கருத்தைக் கேட்டவுடன், கணினித் துறையில் வேலை செய்யும் 90 சதவீத மக்கள் வேலை இழந்துவிடுவார்களா என்ற கேள்வி எழுவது இயல்பே. ஆனால், ஸ்ரீதர் வேம்பு இதற்கு விளக்கமளித்துள்ளார்.
அதாவது, இது 90 சதவீதத்தினருக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்று அர்த்தமல்ல. முன்பெல்லாம் மென்பொருள் இன்ஜினியர்களையோ அல்லது டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணர்களையோ வேலைக்கு அமர்த்த முடியாத சிறிய தொழில்கள் மற்றும் புதிய துறைகள், இனி ஏ.ஐ-ன் உதவியால் அவர்களை எளிதாகப் பணியமர்த்த முடியும் என்று அவர் குறிப்பிடுகிறார். அதாவது, ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்புகள் மறுசீரமைக்கப்படும் என்று அவர் நம்புகிறார்.
இந்த மாற்றம் எளிதானதாக இருக்காது என்றும், இதைக் கடந்து செல்வது சில காலத்திற்குப் வலிமிகுந்ததாக இருக்கலாம் என்றும் வேம்பு எச்சரித்துள்ளார். இந்த மாற்றத்தை நாம் தடுத்து நிறுத்த முடியாது என்பதால், வரும் காலங்களை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்பதே அவரது அறிவுரையாக உள்ளது.
ஏ.ஐ தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் ஏற்படும் சர்வர் செலவுகள் மற்றும் மேலாண்மை சவால்களைச் சமாளிக்க ஜோஹோ நிறுவனம் தனது உள் கட்டமைப்புகளில் சில மாற்றங்களைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தை எப்படி இருக்கப் போகிறது என்பதை உணர்ந்து, அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இன்றைய பணியாளர்கள் உள்ளனர்.




