காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவரும் மூத்த தலைவருமான சோனியா காந்தி எழுதிய ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற நினைவுக் குறிப்புச் சுயசரிதை புத்தகம் நாடெங்கும் வெளியானது.
அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமக்கும் இடையிலான அரசியல் வேறுபாடுகள் தனிப்பட்ட பகை அல்ல என்றும், அது இந்தியா பற்றிய இரு வேறு கொள்கை சார்ந்த தொலைநோக்கு பார்வைகளுக்கு இடையிலான சித்தாந்தப் போராட்டம் என்றும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது புத்தகத்தில் பிரதமர் மோடிடனான சித்தாந்த வேறுபாடு குறித்து சோனியா காந்தி எழுதியுள்ள முக்கிய அம்சங்கள்:
நாங்கள் இரு வேறு சித்தாந்த உலகங்களில் இருந்து வந்தவர்கள். இந்த தேசத்தைப் பற்றிய அவரது பார்வையும் எனது பார்வையும் முற்றிலும் மாறுபட்டவை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தவாதிகள் மற்றும் அவரது சொந்த அனுபவங்களின் அடிப்படையிலேயே நரேந்திர மோடியின் இந்தியா பற்றிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
அவர் தனது தொலைநோக்கு இந்தியாவிற்காகப் போராடினார்; நான் ஆதிக்கம் இல்லாத, மதச்சார்பற்ற, சமூக நீதிக்கான எனது இந்தியாவிற்காகப் போராடினேன் என்று சோனியா காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமராக மோடி 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவியில் இருக்கும் நிலையிலும், அவருடன் தனக்கு முறையான நேரடித் தொடர்புகள் எதுவும் இருந்ததில்லை என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதியில் சபாநாயகர் அறையில் நடைபெறும் தலைவர்கள் சந்திப்பு போன்ற அரை-அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் மட்டுமே தாங்கள் சந்திப்பதாகவும், அப்போது இரு தரப்பும் முறையான ‘நமஸ்தே’ வணக்கத்துடன் கடந்து செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் கட்சி எல்லைகளைக் கடந்து தலைவர்களிடையே இருந்த சுமுகமான நட்புறவு தற்போது இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் நடைபெற்ற வன்முறைகளையும் தனது புத்தகத்தில் சோனியா காந்தி நினைவுகூர்ந்துள்ளார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தாம், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதை நினைவு கூர்ந்த அவர், சம்பவத்தின் போது மாநில நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
அன்றைய காலகட்டத்தில் குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்ததையும் அவர் தனது சுயசரிதையில் சுட்டிக்காட்டியுள்ளார்.




