Close
செப்டம்பர் 24, 2026 6:43 மணி

நாடக உலகப் பிதாமகர் பம்மல் சம்பந்தம் நினைவு நாள்

“நாடக உலகப் பிதாமகர்” என்று அழைக்கப்பட்டு நடிகர்களால், நாடகத் தயாரிப்பாளர்களால் போற்றப்பட்ட சம்பந்த முதலியார், பிறந்த சிற்றூரான பம்மலுக்குப் பெருமையும் புகழும் சேர்த்தவர்.

வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவருமான ஐயா சம்பந்தம், தெருக்கூத்து தான் நாடகம் என்ற நிலையை மாற்றி, நகரங்களில் பிரம்மாண்டமாக மேடை அமைத்து பல வகையான நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி, மேல்தட்டு மக்கள், கற்றவர்கள், அறிஞர்களையும் பார்க்க வைத்தார்.

அரசுப் பணியில் உயர் பதவியில் இருந்தாலும், சிறு வயது முதலே நாடகங்களின் மீது தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் நாடகங்கள் மேடைகளில் நாகரிகமின்றியும், ஒழுங்கின்றியும் இருந்ததை மாற்றினார்.

சுமார் 94 நாடகங்களை எழுதியுள்ளார். இவற்றில் புராண நாடகங்கள், சமூக நாடகங்கள் மற்றும் ஆங்கில நாடகங்களின் தழுவல்களும் அடங்கும். சபாபதி, மனோகரா, மதிகேடக தர்பார் ஆகியவை இவரது புகழ்பெற்றவை.

அன்றைய நாட்களில் நாடகங்களில் பெண்கள் நடிப்பது அரிதாக இருந்தது. ஆனால், இவரது நாடக சபைகளில் பெண்கள் பங்கேற்கவும், நாடகக் கலையை நாகரிகமானதாக மாற்றவும் அரும்பாடுபட்டார். மேடையில் செந்தமிழ் நடையை அறிமுகப்படுத்தியதுடன், நேரக் கட்டுப்பாடு, ஒத்திகை முறைகள் மற்றும் தெளிவான உரையாடல்களைக் கொண்டுவந்தார்.

நாடகங்கள் மட்டுமின்றி, நாடக மேடை நினைவுகள் போன்ற தன் வரலாற்று நூல்களையும் எழுதி, தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்துள்ளார். சங்கீத நாடக அகாடமி விருது, பத்மபூஷண் விருது, நாடகப் பேராசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகள், பட்டங்களைப் பெற்றுள்ளார்.

நாடக உலகின் பிதாமகர் என்று போற்றப்பட்ட இவர் 91 வயதில் மறைந்தார். நாடகக் கலைக்குத் தனிச் சிறப்பும் மரியாதையையும் ஏற்படுத்திய பம்மல் சம்பந்த முதலியார் நினைவு, நாடகக்கலை உள்ளளவும் அழியாது.

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top