தமிழக அரசின் இலவச மகளிர் பயண திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்பட உள்ள பாதிப்பு குறித்து, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜோதி குப்புசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு டவுன் பேருந்துகளிலும், தொலைதூர பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் மாநிலம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் தனியார் பேருந்துகள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் பேருந்துகளை இயக்க முடியாத அபாயம் ஏற்படும்.
இதை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையிலும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் ஒரு நாள் அடையாள ஸ்டிரைக் அறிவித்துள்ளது.
இதையொட்டி, நாளை 29ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல், 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, தமிழகம் முழுவதும் ஒரு நாள் பேருந்துகள் ஓடாது. இந்த ஸ்டிரைக்கிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகளும், நாளை இரவு 12 மணி முதல் மறுநாள் இரவு 12 மணிவரை ஓடாது என தெரிவித்துள்ளார்.




