Close
செப்டம்பர் 29, 2026 6:28 மணி

மாவட்ட சமரச மையம் சார்பில் மீடியேஷன் பார் த நேஷன் 3.0 விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் மாவட்ட சமரச மையம் சார்பில், மீடியேஷன் பார் த நேஷன் 3.0 என்ற சமரசத் தீர்வு குறித்த சிறப்பு விழிப்புணர்வு பேரணி, நாமக்கல்லில் நடந்தது.

மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். நாமக்கல் பார்க் ரோட்டில் துவங்கிய பேரணி, கோட்டை ரோடு, மெயின் ரோடு, கடைவீதி வழியாக சென்று, பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

பேரணியில், சமரச மையத்தின் மூலம், வழக்குகளை இருதரப்பினரும் பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் விரைவாகவும், சுமூகமாகவும், இணக்கமான முறையிலும் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதன் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், அக்டோபர் முதல் டிசம்பர் வரை சிறப்பு சமரச இயக்கம் நடக்கிறது. அதன் மூலம், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை, சமரச மையத்தின் மூலம் விரைவாகவும், சுமூகமாகவும் தீர்வு காண பொதுமக்கள் மற்றும் வழக்குத் தரப்பினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சமரசம் மூலம் தீர்வு, சுமூகமான தீர்வு, விரைவான தீர்வு என்ற நோக்கத்தை, பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

மாவட்ட கூடுதல் நீதிபதி பிரபா சந்திரன், சிஜேஎம் சண்முக பிரியா, முதன்மை சார்பு நீதிபதி மகாலட்சுமி, கூடுதல் சார்பு நீதிபதி சச்சிதானந்தம், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் வேலுமயில், மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயம் தலைமை அதிகாரி தங்கமணி, நீதிபதிகள், வக்கீல்கள், சட்டக்கல்லூரி மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top