Close
அக்டோபர் 1, 2026 7:38 மணி

தவெக அமைச்சரவையில் பா.ம.க இடம்பெறாது: சௌமியா அன்புமணி

தவெக அமைச்சரவையில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறாது அது வெறும் வதந்தி என பாமக சட்டமன்ற குழு தலைவரும், பசுமை தாயகத்தின் தலைவருமான சௌமியா அன்புமணி  தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட கிரிவலபாதை திருநேர் அண்ணாமலை கோவில் அருகில் கிரிவலம் வரும் பக்தர்களுக்காக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட 2 சுகாதார வளாகங்கள் திறப்புவிழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மாநகராட்சி ஆணையாளர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் கே.பிரபுதாஸ் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பாமக சட்டமன்ற குழு தலைவரும், பசுமை தாயகத்தின் தலைவருமான சௌமியா அன்புமணி எம்எல்ஏ 2 சுகாதார வளாகங்களை திறந்துவைத்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி எம்எல்ஏ பேசியதாவது, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வரக்கூடிய கிரிவலம் பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையினை ஏற்று நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 20 லட்சத்தில் 2 சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அடுத்த மாதம் நடைபெற உள்ள மகா தீபத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு திருவண்ணாமலை மாநகராட்சி தற்காலிக கழிப்பிடங்கள் அமைத்து பக்தர்களின் வசதியை நிறைவேற்றி வரும் நிலையில் இது போன்று நிறைய திட்டங்களை செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

கிரிவலப்பாதை மற்றும் திருவண்ணாமலை நகர் பகுதிகளில் மலையை மறைத்து எந்த கட்டிடங்களும் கட்ட வேண்டாம் என்று தெரிவித்த அவர், கிரிவலப் பாதையில் எதிர் புறமாக கட்டிடங்களை கட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தவெக அமைச்சரவையில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறாது அது வெறும் வதந்தி என குறிப்பிட்ட அவர், பத்தாயிரம் காவலர்கள் புதிதாக நியமிக்கப்பட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராகும் என தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர்ந்து மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் தவெக அரசு பொறுப்பேற்றவுடன் முதற்கட்டமாக 712 மது கடைகளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டு அவை அனைத்தும் மூடப்பட்டு அதற்கான கடை அட்டவணையை வெளியிட்டதாக குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பாமக மாவட்ட செயலாளர்கள் ஏந்தல் பக்தவச்சலம், பாண்டியன்,மாவட்ட அமைப்பு செயலாளர்கள்,மாவட்ட மாநகர ஒன்றிய நிர்வாகிகள்,  உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள்,  மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  முடிவில் மாநகராட்சி இளநிலை பொறியாளர் சங்கர் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top