கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் மீண்டும் வெங்காயம் கிலோ ரூ. 35 விலையில் வழங்கப்படுகிறது.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை அண்மைக்காலமாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே 2 கட்டங்களாக வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. தற்போது, 3மம் கட்டமாக கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 8,914 நகர்ப்புற ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், ஒரு ரேஷன் கார்டுக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் தொடர்ச்சியான தேவை மற்றும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, 3ம் கட்டமாக தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்து 700 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளுக்கு சென்று சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
11ம் தேதி முதல், மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளிள் ரேஷன் கார்டுதாரர்கள் வெங்காயத்தை பெற்று பயனடையலாம். கூட்டுறவுத்துறையின் கீழ் மூலம் இயங்கும் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை பொதுமக்கள் 96005 61969 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.




