Close
அக்டோபர் 14, 2026 10:11 மணி

நாமக்கல் மாநகராட்சி தும்மங்குறிச்சியில் 14 ஆயிரம் மரக்கன்றுகளுடன் அடர்வன காடுகள் அமைப்பு

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் பசுமைப் பரப்பை அதிகரித்து, சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில், மியாவாக்கி காடுகள் எனப்படும் அடர்வனக் காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 14 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, நகரின் பசுமைச் சூழலை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதல் குறுங்காட்டில் 6,200 மரக்கன்றுகளும், இரண்டாவது குறுங்காட்டில் 7,800 மரக்கன்றுகளும் என மொத்தம் 14,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 4 அடுக்கு முறையில் தாவரங்கள் தேர்வு செய்யப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த முறையில் குறுகிய இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்த்து, இயற்கையான காடு போன்ற சூழல் உருவாக்கப்படுகிறது. மியாவாக்கி முறையில் மரங்கள், அவற்றின் வளர்ச்சி, உயரம் மற்றும் இயற்கையான காடுகளில் அவை வகிக்கும் பங்கின் அடிப்படையில் 4 அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு நடவு செய்யப்படுகின்றன.

முதலாவதாக புதர் அடுக்கில் மொத்த நடவுகளில் 35 சதவீதம் புதர் வகைத் தாவரங்கள் இடம்பெறுகின்றன. இவை மண்ணின் மேற்பரப்பை மூடி, மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும், சிறிய உயிரினங்கள் மற்றும் பூச்சிகளுக்கு வாழிடங்களை உருவாக்கவும் உதவுகின்றன. 2வதாக துணை மர அடுக்கு, மொத்த நடவுகளில் 35 சதவீதம் துணை மர வகைகள் இடம்பெறுகின்றன. இவை குறுங்காட்டின் நடுத்தர உயர அடுக்கை உருவாக்கி, அடர்த்தியான பசுமைச் சூழலை மேம்படுத்துகின்றன.

3வதாக நடப்படும், மர அடுக்கில் மொத்தம் 20 சதவீதம் மர வகைகள் இடம்பெறுகின்றன. இவை குறுங்காட்டின் முக்கிய மர அடுக்கை உருவாக்கி, காற்றிலுள்ள தூசித் துகள்களைப் பிடித்தல், கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுதல், காற்றின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் நகர்ப்புற வெப்பத்தைக் குறைக்க உதவுதல் போன்ற சுற்றுச்சூழல் நன்மைகளை வழங்குகின்றன.

4வதாக உயர்மரக் குடை அடுக்கு உருவாக்கப்படுகிறது. இதில் மொத்த நடவுகளில் 10 சதவீதம் உயரமாக வளர்ந்து, பரந்த கிளைகளையும் இலைக்குடைகளையும் உருவாக்கும் மர வகைகள் இடம்பெறுகின்றன. இவை நிழலை வழங்கி, மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும், நிலத்தின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்குப் பாதுகாப்பான வாழிடத்தை உருவாக்கவும் உதவுகின்றன.

பசுமையான, தூய்மையான, வளமான நாமக்கல் என்ற நோக்கில், மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பையும், விழிப்புணர்வையும் அதிகரிக்கும் வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top