Close
நவம்பர் 26, 2026 5:35 மணி

நாமக்கல் மாநகராட்சியில் புதிய பாதாள சாக்கடை திட்டம்: கமிஷனர் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில், உலக வங்கி மூலம் செயல்படுத்தப்படும், தமிழ்நாடு காலநிலை தாங்கும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 211.83 கோடி மதிப்பில், புதிய பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் கான்ட்ராக்டர் மூலம், பீகார், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 150 தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களின் தங்குமிடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், சுகாதார வசதிகள் எவ்வாறு உள்ளன, அவை, நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் உள்ளனதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது, பணியின் போது, தொழிலாளர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அவர்களுக்கு கிடைக்கக் கூடிய பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் பற்றியும் விளக்கியதுடன், உறுதியளிக்கப்பட்ட வாழ்வாதாரம் வழங்கப்படுவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும், தொழிலாளர்களின் குழந்தைகள் பாதுகாப்பான, சுகாதாரமான சூழலில் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில், அவ்வப்போது மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து, பாதாள சாக்கடை திட்டத்திற்கான பொருட்கள் சேமிப்பு வளாகத்தை, நேரில் ஆய்வு செய்து, திட்டப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களின் தரத்தை உரிய முறையில் பரிசோதித்து, நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்க இருப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் புதியதாக அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடைதிட்டப் பணிகள் தொடர்பான புகார்களை, 99442 14905 என்ற மொபைல் எண்ணிற்கு, வாட்ஸ்அப் மூலம் புகார்கள் தெரிவிக்கலாம் என அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top