பொதுமக்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், நாமக்கல் மண்டலத்தில், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், தொடக்கக் கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் விற்பனை நிலையங்கள் மூலம் 6 மளிகைப் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
மாவட்டத்தில் மாநகராட்சி அல்லாத பகுதிகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட 4 விற்பனை நிலையங்கள் மூலம் 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய ஒருங்கிணைந்த தொகுப்பு ரூ. 200 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை மூலம் விற்பனை செய்யப்பட்டு வரும் 6 மளிகைப் பொருட்களும், தற்பொழுது விற்பனை செய்யப்பட்டு வரும் விலையிலிருந்து மேலும் 10 சதவீதம் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி தற்போது ஒரு கிலோ ரூ. 60க்கும் விற்பனை செய்யப்படும் பொன்னி புழுங்கல் அரிசி ரூ. 54க்கும், ரூ. 130க்கும் விற்பனை செய்யப்படும் துவரம்பருப்பு ரூ. 117க்கும், ரூ. 140க்கு விற்பனை செய்யப்படும் உளுத்தப்பருப்பு ரூ. 126க்கும், ரூ. 240க்கு விற்பனை செய்யப்படும் பூண்டு மற்றும் தனியா (மல்லி) ரூ. 216க்கும், ரூ. 330க்கு விற்பனை செய்யப்படும் வரமிளகாய் ரூ. 297க்கும் விற்பனை செய்யப்படும்.
வெளிச்சந்தையை விட மிகக் குறைந்த விலையிலும், தரமான முறையிலும் வழங்கப்படும் பொருட்களை பொதுமக்கள் வாங்கி பயனடையலாம் என மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார்.




